இந்தியா

இந்திய குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

செய்திப்பிரிவு

உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் முதல் குடிமகனை மக்கள் ஏன் தேர்ந்தெடுப்பதில்லை என்று யோசித்திருக்கிறீர்களா?

உண்மையைக் கூற வேண்டுமானால், இந்திய மக்களே குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் தேர்தல் மட்டும் நேரடியாக நடப்பதில்லை. பொதுத் தேர்தலில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் வாக்காளர்களாகி, சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலுக்கு தங்கள் வாக்குகளைப் பதிவு செய்கின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.

அதாவது 29 மாநில எம்எல்ஏ.க்கள், தலைநகர் டெல்லி மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியைச் சேர்ந்த எம்எல்ஏ.க்கள், மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் ஆகியோர் வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

வாக்குகள் எப்படிக் கணக்கிடப்படுகின்றன?

பதவி

எண்ணிக்கை



எம்பி.க்கள் (மக்களவை)

543



எம்பி.க்கள் (மாநிலங்களவை)

233





எம்எல்ஏ.க்கள்

4,120



மொத்தம்

4,896 பேர்



ஆக ஒட்டுமொத்த எம்எல்ஏ.க்கள் மற்றும் எம்பி.க்களின் எண்ணிக்கை 4,896. இவர்கள் அனைவரும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.

வாக்கு மதிப்பு எப்படி?

எம்எல்ஏ.க்களின் வாக்கு மதிப்பு

தேர்தலில் எம்எல்ஏ.க்களின் வாக்குகளுக்கான மதிப்பு மாநிலத்துக்கு மாநிலம் மக்கள் தொகையின் அடிப்படையில் வேறுபடும்.

ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையை, அந்த மாநில எம்எல்ஏ.க்களின் எண்ணிக்கையால் வகுக்க வேண்டும். அதில் வரும் ஈவை 1000-த்தால் வகுத்தால் எவ்வளவு வருகிறதோ அதுதான் ஒரு எம்எல்ஏ.வின் வாக்கு மதிப்பாகக் கணக்கிடப்படுகிறது.

அதாவது, மாநிலத்தின் மக்கள் தொகை / மாநில எம்எல்ஏ.க்களின் எண்ணிக்கை * 1000

இது மாநிலத்துக்கு மாநிலம் மாறும். ஒட்டுமொத்த மாநில மற்றும் யூனியன் பிரதேச எம்எல்ஏ.க்களின் வாக்கு மதிப்பு 5,49,495.

எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு

எம்.பி.க்களின் வாக்கு மாநிலத்துக்கு மாநிலம் மாறாது. இதைக் கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.

எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு = ஒட்டுமொத்த எம்எல்ஏ.க்களின் எண்ணிக்கை / ஒட்டுமொத்த எம்பி.க்களின் எண்ணிக்கை

எண்ணிக்கையில், 549495/ 776 = 708.

எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு தலா 708. மொத்தம் 776 எம்பி.க்கள் என்பதால்

708 * 776 = 5,49,408

ஒட்டுமொத்த எம்பி.க்களின் வாக்கு மதிப்பு 5,49,408.

மொத்த வாக்கு மதிப்பு

இதன்படி மொத்த வாக்கு மதிப்பு = எம்எல்ஏ.க்களின் வாக்கு மதிப்பு + எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு

549495 + 549408 = 10,98,903.

குடியரசுத் தலைவர் தேர்தலில் 4,896 பேர் வாக்களிக்க, மொத்தம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 903 வாக்கு மதிப்பாக கணக்கிடப்படும்.

© தி இந்து ஆங்கிலம் இணையதளம்

SCROLL FOR NEXT