காஷ்மீர் மாநிலத்தில் அசாதாரண நிலை தொடரும் சூழலில் நோவட்டா, ஸ்ரீநகர், பாரமுல்லா ஆகிய இடங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பிரிவினைவாதிகள் தங்கள் போராட்டத்தை வரும் 8-ம் தேதி வரை நீட்டித்துள்ளதால் பாதுகாப்புப் படையினர் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியுள்ளனர்.
புதன்கிழமை பாரமுல்லா மாவட்டத்தில் ராபியாபாத்தில் பாதுகாப்பு வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய டானிஷ் அகமது என்ற 18 வயது இளைஞர் படையினரால் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து ஏற்பட்ட கலவரங்களில் மக்கள் ஜனநாயக கட்சியின் ராஜ்யசபா எம்.பி, நாஜிர் அகமதுவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
கலவரங்கள் தொடர்வதால் காஷ்மீர் மாநிலத்தில் நோவட்டா, ஸ்ரீநகர், பாரமுல்லா ஆகிய இடங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வியாழக்கிழமையும் ஆங்காங்கே கல்வீச்சு சம்பவங்கள் தொடர்கிறது. சோபூர் மாவட்டத்தில் மூன்று சக்கர வாகனம் ஒன்றுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர்.
பிரிவினைவாதிகள் செப்டம்பர் 8-ம் தேதிவரை முழுஅடைப்புப் போராட்டத்தைத் தொடருமாறு பொதுமக்களிடம் புதிய அட்டவணையை வழங்கியுள்ளனர்.
காஷ்மீரில் கடந்த ஜூலை 8-ம் தேதி முதல் இதுவரை நடைபெற்ற மோதல்களில் பொதுமக்களில் 69 பேர் உட்பட 72 பேர் பலியாகினர். 11,000 பேர் காயமடைந்தனர்.