காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில், விசாரணை நடத்துமாறு போலீஸுக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், “ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றனர்” என்று கூறியிருந்தார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிவாண்டி பகுதி செயலாளர் ராஜேஷ் மகதேவ் குந்தே, பிவாண்டி நீதிமன்றத்தில் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந் தார். இதை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், அறிக்கை தருமாறு மகாராஷ்டிர போலீஸுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ராகுல் மனு செய்தார். இந்த மனு ரத்து செய்யப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ஆர்.எப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் ராகுல் மன்னிப்பு கோராவிட்டால் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இம்மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறும்போது, “இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தனியார் தொடர்புடைய அவதூறு புகார்கள் மீது போலீஸார் விசாரணை நடத்த முடியாது என கூறப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் புகார் செய்பவர்கள்தான் அதை நிரூபிக்க வேண்டும். எனவே, இந்த வழக்கில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீஸுக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட முடியாது” என்றனர்.
இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும் அன்றையதினம் இந்த விவாகரம் குறித்து இருதரப்பும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.