இந்தியா

59 பேர் பலியான தீ விபத்து வழக்கு: டெல்லி திரையரங்க உரிமையாளருக்கு ஓராண்டு சிறை

செய்திப்பிரிவு

உப்ஹார் திரையரங்க தீ விபத்து வழக்கில் அதன் உரிமையாளர் கோபால் அன்சாலுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.

தெற்கு டெல்லியில் இருந்த உப்ஹார் திரையரங்கில் கடந்த 1997 ஜூன் 13-ல் நேரிட்ட தீ விபத்தில் 59 பேர் பலியாகினர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2015-ல் அளித்த தீர்ப்பில், உப்ஹார் திரையரங்க உரிமையாளர்கள் சுஷில் அன்சால், கோபால் அன்சால் ஆகியோருக்கு தலா ரூ.30 கோடி அபராதம் விதித் தது. அபராதத்தை செலுத்த தவறி னால் 2 ஆண்டுகள் சிறை தண்ட னையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் அபராதத் தொகையை செலுத்தி சிறை தண்டனையிலிருந்து தப்பினர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தீ விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனை நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், குரியன் ஜோசப், ஆதர்ஷ் குமார் கோயல் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினர்.

அதில் கோபால் அன்சாலுக்கு (66) ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வயது முதுமை காரணமாக சுஷில் அன்சால் (77) விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து, தீ விபத்தில் 17 வயது மகள், 13 வயது மகனை இழந்த நீலம் கிருஷ்ணமூர்த்தி கூறியபோது, திரையரங்க உரிமை யாளர்களின் தவறால் எங்கள் உறவுகளை இழந்துள்ளோம். 20 ஆண்டுகள் கழித்தும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தீர்ப்பு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது, வருத்த மளிக்கிறது என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT