இந்தியா

குஜராத்தில் அடுத்த ஆண்டு தேர்தல்: ஹர்திக் படேலை இழுக்க அரசியல் கட்சிகள் தீவிர முயற்சி

பிடிஐ

குஜராத் மாநிலத்தில் பட்டிடார் அல்லது படேல் சமூகத்தை சேர்ந்த ஹர்திக் படேல் (22) தங்கள் சமூகத்தவரை இதர பிற்படுத்தப் பட்டோர் பிரிவில் சேர்த்து கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்.

அது வன்முறையில் முடிந்து அவர் மீது 2 தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 9 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்ட ஹர்திக், கடந்த வெள்ளிக்கிழமை நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இந்நிலையில், ஹர்திக் படேலை தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அப்போது ஆளும் பாஜக.வை தோற்கடிக்க ஹர்திக்கின் படேல் சமூகத்தவரின் ஆதரவு பெரிதும் உதவும் என்று அந்தக் கட்சிகள் நினைக்கின்றன.

குஜராத்தில் படேல் சமூகத்த வரின் எண்ணிக்கை 18 சதவீதமாக உள்ளது. இந்த சமூகத்தினர் பாஜக.வுக்கு ஆதரவாகதான் இருந்தனர். இடஒதுக்கீடு பிரச்சினை காரணமாக இப்போது அவர்கள் ஹர்திக் படேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர்களிடம் ஹர்திக் நேற்று கூறும்போது, ‘‘என்னுடைய சமூகத்தினர் விரும்பினால், நான் அரசியலில் இணைவேன். அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நேரம் வரும்போது என்னுடைய முடிவை சொல்கிறேன்’’ என்றார்.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை ஹர்திக் படேல் ஜாமீனில் வெளிவந்த போது, அவரை வரவேற்று காங்கிரஸ் கட்சி சுவரொட்டி ஒட்டி வரவேற்றது. தேசியவாத காங்கிரஸ் குஜராத் தலைவர் ஜெய்ந்த் படேல், ஹர்திக்கை முதலாவதாக வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். ஹர்திக் படேலுக்காக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. அவர் எப்போது வேண்டுமானாலும் வரலாம்’’ என்று பகிரங்கமாகவே கூறியுள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் மணீஷ் தோஷி கூறும்போது, ‘‘காங்கிரஸ் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர் யாராக இருந்தாலும் அவர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் என்று ஏற்கெனவே ஹர்திக்குக்கு செய்தி தெரிவித்து விட்டோம்’’ என்றார்.

குஜராத்துக்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், தங்கள் கட்சிக்குள் ஹர்திக்கை அழைத்து வரும்படி கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், ‘‘எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டேன்’’ என்று முன்னர் ஹர்திக் கூறியிருந்தார்.

SCROLL FOR NEXT