இந்தியா

முதல்வராக சசிகலா பதவியேற்பதை ஆளுநர் தாமதம் செய்வதாக : புகார் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அதிமுக எம்.பி.க்கள் ஆவேசம்

செய்திப்பிரிவு

தமிழக முதல்வராக வி.கே.சசிகலா பதவியேற்பதை ஆளுநர் வித்யாசாகர் ராவ் தாமதம் செய் வதாகக் கூறி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக எம்.பி.க்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவை களும் ஒத்தி வைக்கப்பட்டன.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரம் தொடங்கிய தும், அவையின் அதிமுக தலைவர் பி.வேணுகோபால், இந்த விவ காரத்தை எழுப்பினார். இதற்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி மறுத்தார். இதனால் கே.என்.ராமச்சந்திரன், அன்வர் ராஜா, செந்தில்நாதன், செல்வ குமார், சின்னையன் உள்ளிட்ட அதிமுக எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன் நின்று ஆவேச மாக கோஷமிட்டனர்.

‘ஜனநாயகத்தை காப்பாற்றுங் கள்’, ‘சசிகலாவை முதல்வர் ஆக் குங்கள்’ என்று அவர்கள் கோஷ மிட்டனர். அப்போது அவையில் தனது உறுப்பினர் இருக்கையில் அமர்ந்திருந்த துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை, அதிமுக உறுப் பினர்களுக்கு துண்டுச்சீட்டு எழுதி அளித்து ஊக்கப்படுத்தினார். இதனால் அவையில் அமளி ஏற் பட்டதால் இருபது நிமிடங்களுக்கு அவை ஒத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் 11.30 மணிக்கு அவை கூடிய போதும் அதிமுக உறுப்பினர் சிலர் சபாநாயகர் இருக்கை முன் நின்று அதே பிரச்சினையை எழுப் பினர். மற்றவர்கள் தங்கள் இருக் கையிலிருந்து எழுந்து நின்றபடி கோஷமிடத் தொடங்கினர். இதற்கு, சபாநாயகர், 12 மணிக்கு மேல் பேச வாய்ப்பு அளிப்பதாகக் கூறி அனைவரையும் அமர வைத்தார். ஆனால் அதன்பிறகு அவர் அவ்வாறு வாய்ப்பளிக்கவில்லை. என்றாலும் இதற்காக அதிமுக உறுப்பினர்கள் பிரச்சினை செய்யவில்லை. இது குறித்து அதிமுக எம்.பி.க்கள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “ஆளுநருக்கு எதிரான சட்ட விவகாரத்தை அவையில் எழுப்ப முடியாது என சபாநாயகர் கூறிவிட்டார்” என்றனர்.

இதேபோல், மாநிலங்களவை யிலும் தொடக்கத்திலேயே சசிகலா பதவியேற்பு விவகாரத்தை அதிமுக உறுப்பினர்கள் எழுப்ப முயன்றனர். இதற்கு அவைத் தலைவர் ஹமீது அன்சாரி அனுமதி மறுக்கவே, தொடர்ந்து பலமுறை இந்த பிரச் சினையை எழுப்ப முயன்று கோஷ மிட்டனர். காங்கிரஸ் மற்றும் கம்யூ னிஸ்ட் உறுப்பினர்கள் வெவ்வேறு பிரச்சினைகளை எழுப்பியபோது அதிமுக உறுப்பினர்களும் தமிழக ஆளுநர் விவகாரத்தை எழுப்பினர். இதில், கோஷமிட்டதுடன் அமளியி லும் ஈடுபட்டனர். ஒரே சமயத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செய்த பிரச்சினையால் அவையில் கடும் அமளி நிலவியது. இதனால் மாநிலங்களவையும் ஒத்தி வைக் கப்பட்டது.

திடீர் போராட்டம்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி தொடங்கியது. இதில் முதல் 4 நாட் கள் மட்டும் இரு அவைகளுக்கும் அதிமுக உறுப்பினர்கள் வந்திருந் தனர். இதற்கு அடுத்த வாரம் சென்னையில் இருந்து டெல்லி கிளம்பியவர்கள் உட்பட அனை வரும் அதிமுக தலைமையால் திரும்ப அழைக்கப்பட்டனர். மக்களவை அதிமுக தலைவரான வேணுகோபால் மட்டும் அவை நட வடிக்கையில் கலந்துகொண்டார்.

இதனிடையே சசிகலா பதவி யேற்பு விவகாரத்தில் தமிழக ஆளுநர் மீது குடியரசுத் தலைவரி டம் அதிமுக எம்.பி., எம்எல்ஏக்கள் புகார் அளிக்க நேற்று முன்தினம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஆளுநர் தமிழகம் வருவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர். என்றாலும் சுமார் 30 எம்.பி.க்கள் முன்கூட்டியே டெல்லி கிளம்பி விட்டதால் அவர்கள் நேற்று நாடாளுமன்றம் வந்திருந்தனர்.

இங்கு திடீர் என முடிவு எடுத்து சசிகலா பதவியேற்பு விவகா ரத்தை இரு அவைகளிலும் எழுப் பினர். நேற்று காலை 6.30 மணி விமானத்தில் கிளம்பி வருவதாக இருந்த மற்ற எம்.பி.க்கள் சென்னையிலேயே தங்கி விட்டனர். நாடாளுமன்றத்தின் முதல்கட்ட கூட்டம் நேற்றுடன் முடிவடைந்தது. எனினும் அதிமுக எம்பிக்கள் டெல்லியிலேயே தங்கியுள்ளனர். இவர்கள் தம்பிதுரை தலைமையில் குடியரசுத் தலைவரைச் சந்திக்க காத்திருக்கின்றனர்.

SCROLL FOR NEXT