உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி மேற்கொண்டுள்ள காங்கிரஸ் பற்றியும், நரேந்திர மோடியின் ஆட்சி குறித்தும் ராகுல் காந்தி விரிவான பேட்டி அளித்துள்ளார்.
தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு ராகுல் காந்தி அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்:
இந்த சட்டப்பேரவை தேர்தல்கள் தேசிய அரசியலுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது?
ராகுல் காந்தி: நாட்டின் மீது ஒரு குறிப்பிட்ட கருத்தியலை பாஜக திணிக்க விரும்புவதாக நான் எண்ணுகிறேன். தேசத்தின் தூண்களான அமைப்புகளில் தங்கள் கருத்தியல் சார்ந்த நபர்களை நியமிக்கின்றனர். அவர்களது இந்தச் செயல்பாடுகள் ஏகப்பட்ட அதிருப்திகளை கிளப்பியுள்ளது.
இதுதான் பாஜக எதிர்ப்பலையை கட்டமைத்துள்ளது. பொதுவாக ஏழைகள், நலிவுற்றோர், விவசாயிகள், தலித்துகள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு பாஜக ஆட்சி நிறைய வலிகளை அளித்துள்ளது.
பணமதிப்பு நீக்கம் ஓர் உதாரணம், விவசாயத்தை முழுதுமாக புறக்கணித்தது இரண்டாவது காரணம். குஜராத்தில் தலித்துகள் மீதான தாக்குதல், நாடு முழுதுமே சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அனைத்துமே பாஜகவுக்கு எதிரான ஒரு அலையை ஏற்படுத்தியுள்ளன.
பொதுவாக நடப்பு ஆட்சியைப் பற்றிய ஒரு பயம் ஏற்பட்டுள்ளது குறிப்பாக இளைஞர்கள் இதனை உணர்ந்துள்ளனர். அவர்கள் எதையும் விவாதிப்பதில்லை, கலந்தாலோசிப்பதில்லை, அனைத்தையும் ஒரு மனிதர் முடிவு செய்கிறார். அவர் தன் அமைச்சரவை சகாக்களைக் கூட கலந்தாலோசிப்பதில்லை. இந்தியாவை இப்படி வழி நடத்த முடியாது. இந்தியா தனக்கேயுரிய விடைகளை உருவாக்கக் கூடியது. இந்தியாவை நடத்தும் அரசு இத்தகைய விடைகளை அரவணைக்க வேண்டும். தன் விடைகளை கேள்விகள் மீது திணிக்கக் கூடாது.
கேள்வி: ஆனால்.. பணமதிப்பு நீக்கம் ஏழைகளால் வரவேற்கப்படுவதாக பிரதமர் மோடி கூறுகிறாரே
ஏழைமக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் முடிவுகளை அவர்கள் எப்படி வரவேற்பார்கள்? விதைகளை விதைக்க விவசாயிகளுக்கு நிதியளிக்காததையும் தொழிலாளர்களுக்கு சம்பளம் அளிக்காததையும் எப்படி இவர்கள் வரவேற்பார்கள். இது அபத்தமானது. பணமதிப்பு நீக்க முடிவை 2-3 விஷயங்களே தீர்மானித்துள்ளன. நாட்டின் தூணாக செயல்படும் நிறுவனத்தை பாஜக முழுதாக கைப்பற்றியது. மத்திய ரிசர்வ் வங்கியின் தன்னிச்சையான செயல்பாட்டை முடக்கியது இதில் ஒரு உதாரணம்.
நாட்டின் பொருளாதாரத்தை அசைக்கும் ஒருமுடிவை எடுக்கப்போவதாக 8 மணி நேரம் முன்பாகவா அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும், ஆனால் செய்து முடித்த பிறகே அவர்களுக்குத் இது பற்றி தெரிய வந்துள்ளது. இது ஒரு குறிப்பிட்ட தலைமைத்துவ பாணியை வெளிப்படுத்துகிறது. பணமதிப்பு நீக்கத்துக்கு முன்னால் அவரது அமைச்சரவை மூடப்பட்டது. அரசின் பொருளாதார ஆலோசகருக்கே தெரிவிக்கப்படவில்லை.
2-வதாக பணமதிப்பு நீக்கம் கருப்புப் பணத்தை குறிவைத்து செய்யப்பட்டது என்ற பிரதமரின் கோரல். 94% கருப்புப் பணம் ரொக்கத்தில் இல்லை. எனவே கருப்புப் பணத்தில் முதலைகளின் பங்கை நோக்கி நடவடிக்கை இல்லை என்பது தெரிகிறது. கடைசியில் பொருளாதாரத்தை நொறுக்கியதுதான் நடந்தது. ஏதோ ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டு ஏதோ பெரிய முடிவை தாங்கள் எடுத்துவிட்டதாக அவர்கள் கருதுகின்றனர்.
பணமதிப்பு நீக்கம் பாஜக-வை பெரிய அளவில் உலுக்கும். நியாயமான பணப்பொருளாதாரத்தில் உள்ள அனைவரையும் இது பாதித்துள்ளது. இன்னொரு விஷயம் பணமதிப்பு நீக்கம் செய்ததென்னவெனில் வருமான வரித்துறையினருக்கு வானளாவிய அதிகாரம் அளித்தது. உ.பி.யில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான நோட்டீஸ்களை வருமானவரித்துறையினர் அனுப்பியுள்ளனர். எனவே வணிகத்துக்கான சாதக சூழலும் அடிவாங்கியது. சாதாரண மக்கள் மீது வருமான வரித்துறையினரை ஏவிவிட்டனர்.
ஆர்பிஐ என்ன வெறும் கட்டிடமா? நம் ஆண்டாண்டு கால நிதி அமைப்புகள் பற்றிய அறிவு உள்ள ஒரு நிறுவனம். இதனை பிரதமரும் அவரது சகாக்களும் மதிக்கவில்லை.
ஏழை மக்கள், ஏன் வர்த்தகத் துறையைச்சேர்ந்தவர்களே கூட தற்போது பணமதிப்பு நீக்கம் தவறு என்று கருதுகின்றனர். 2019 தேர்தல் வரை இந்த உணர்வு நீடிக்கவே செய்யும். எதிர்க்கட்சிகள் இந்த உணர்வை புரிந்து கொண்டு மாற்றுகளை அளிக்க வேண்டும்.
வேலைவாய்ப்புகளில் அவரது ஆட்சி தோல்வியடைந்துள்ளது. கல்வியிலும் தோல்வி அடைந்துள்ளது. அவர் எதில்தான் வெற்றி பெற்றார் என்று எனக்குத் தெரியவில்லை.
எதிர்க்கட்சிகள் தோல்வியடையவில்லை. அடுத்த தேர்தலில் வெற்றி பெறப் போகிறோம்.
இவ்வாறு இந்தப் பேட்டியில் கூறியுள்ளார் ராகுல் காந்தி