இந்தியா

முத்தலாக் முறையை எதிர்த்து உங்கள் மகள்கள் போராடினால் ஆதரியுங்கள்: மோடி

நிஸ்துலா ஹெப்பர்

முத்தலாக் விவகாரத்தை அரசியல் பிரச்சினையாக்க வேண்டாம் மாறாக அந்த நடைமுறையை எதிர்த்து உங்கள் மகள்கள் போராடினால் ஆதரியுங்கள் என முஸ்லிம் சமூகத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னட அறிஞர் பசவேஸ்வராவின் பிறந்தநாளை ஒட்டி டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில், கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா, அனந்த குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, "இத்தருணத்தில் முஸ்லிம் மக்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். முத்தலாக் விவகாரத்தை அரசியலாக்காதீர். முற்போக்கு முஸ்லிம் பெருமக்கள் தங்கள் பெண் பிள்ளைகள் முத்தலாக்குக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும்போது அதை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

ஏற்கெனவே புவனேஸ்வரில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசியபோதும், முஸ்லிம் சகோதரிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என முத்தலாக் விவகாரத்தை சுட்டிக்காட்டி மோடி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இவ்விவகாரம் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT