இந்தியா

16 ஆண்டுகள் உண்ணாவிரதத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி: தேர்தலில் களமிறங்குகிறார் இரோம் ஷர்மிளா

பிடிஐ

மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறக் கோரி 16 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு, தேர்தலில் போட்டியிடப் போவதாக இரோம் ஷர்மிளா அறிவித்துள்ளார்.

மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி, கடந்த 2000 முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர் இரோம் ஷர்மிளா. இந்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெறும் வரை உணவு, நீர் அருந்தாமல் தொடர்ந்து போராடப் போவதாக அறிவித்து, உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதன் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறி போலீஸார் கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர்.

ஒவ்வொரு முறையும் அவர் ஜாமீனில் விடுதலையாகும் போதெல்லாம், உடனடியாக உண்ணாவிரதம் தொடங்கி வந்தார். இதனால் மணிப்பூரில் இரோம் ஷர்மிளாவுக்கு ஆதரவாளர்கள் பெருகி வருகின்றனர்.

எனினும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தால் எந்தவொரு ஆக்கப்பூர்வமான மாற்றமும் ஏற்படாததை அடுத்து, தேர்தலில் போட்டியிட்டு அதன் மூலம் தனது போராட்டத்தை நடத்த இரோம் ஷர்மிளா முடிவு செய்துள்ளார்.

இது குறித்து நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘எனது போராட்டத்துக்கு அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை. எனவே 16 ஆண்டுகால உண்ணாவிரதத்தை வரும் ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு, தேர்தல் மூலம் தொடர்ந்து போராடப்போகிறேன்’’ என்றார். மேலும் திருமணம் செய்துகொள் ளவும் தான் விரும்புவதாக தெரிவித்தார். மணிப்பூரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த இரோம் ஷர்மிளா?

• மணிப்பூர் தலைநகரான இம்பாலில் உள்ள கோங்பாலில் 1972-ல் பிறந்தவர் இரோம் ஷர்மிளா.

* கிளர்ச்சி மற்றும் நக்சல் போராட்டம் காரணமாக மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை அமல்படுத்தியது.

* நீதிமன்ற உத்தரவின்றி யாரையும் கைது செய்யவும், விசாரணை நடத்தவும் இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

* கடந்த 2000, நவம்பர் 2-ம் தேதி மலோம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக பொதுமக்கள் காத்திருந்தபோது ஆயுதப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

* மலோம் படுகொலையை நேரில் பார்த்து கொதித்தெழுந்த இரோம் ஷர்மிளா ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறக் கோரி நவம்பர் 4-ல் போராட்டத்தை தொடங்கினார்.

* 3 நாட்களுக்கு பின் அவரை போலீஸார் கைது செய்து தற்கொலைக்கு முயன்றதாக வழக்குபதிவு செய்தனர்.

* உயிர் வாழ்வதற்காக மூக்கின் வழியே வலுக்கட்டாயமாக திரவ உணவு செலுத்தினர்.

* தற்கொலை வழக்கில் கைதாகும் நபரை ஓர் ஆண்டு வரையில் மட்டுமே சிறையில் அடைக்க முடியும்.

* அந்த வகையில் இரோம் ஷர்மிளா ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு, பின்னர் உண்ணாவிரதம் இருந்ததற்காக மீண்டும் கைதாவார்.

* இரோம் ஷர்மிளாவை, மணிப்பூர் மக்கள் தங்களது இரும்பு பெண்மணி என போற்றுகின்றனர்.

SCROLL FOR NEXT