பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்கப் பயணத்தால் சர்வதேச அரங்கில் இந்தியா முக்கியத்துவம் பெற்றுள்ளது என பாஜக வெளியுறவுக் கொள்கை பிரிவின் அகில இந்திய அமைப்பாளரும், கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான சேஷாத்திரி சாரி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘ஆர்கனைஸர்’ ஆங்கில வார இதழின் ஆசிரியராக 12 ஆண்டுகள் பணியாற்றியவர்.
‘தி இந்து’விடம் அவர் அளித்த பேட்டி:
உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர் பாக, அமெரிக்கப் பயணத்தின் முக்கிய சாதனைகள் என்ன?
இந்தப் பயணத்தில் இந்திய-அமெரிக்க உலகளாவிய தோழமையின் முக்கியத்துவம், உளவுத் தகவல்கள் பரிமாற்றம், பயங்கர வாதத்துக்கு எதிரான நடவடிக்கை, சட்ட அமலாக்க ஒத்துழைப்பு ஆகிய வற்றின் மூலம் உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், கூட்டு ராணுவப் பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மூலமாகவும் பாதுகாப்பு அதிகரிக்கும்.
மோடியின் அமெரிக்கப் பயணத்துக்குப் பிறகு இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதற்கு உதாரணம் கூற முடியுமா?
கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச விவகாரங்களில் அக்கறையுள்ள நாடு என்ற முறையில் இந்தியாவின் நம்பகத்தன்மை மிகவும் குறைந்திருந்தது. ஆனால் மோடியின் பயணமும் அவரது அணுகுமுறையும் இந்தியாவை மீண்டும் சர்வதேச வரைபடத்தில் முக்கியத்துவம் பெற வைத்துள்ளது. மோடியின் அமெரிக் கப் பயணமும் உரைகளும் பல நாடு களின் தலைநகரங்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டன.
நீண்ட காலத் திட்டத்தில் இருநாடுகள் இடையே கூட்டு நடவடிக்கைகள் இருக்கிறதா?
கடல்வழிப் பயண சுதந்திரம், சட்டப்பூர்வ வணிகம் ஆகியவற்றைப் பராமரிக்க இணைந்து செயல்பட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இப் பயணத்தில் ஏற்பட்டுள்ள சுகாதாரக் கூட்டுறவின் மூலம், எபோலா நோய் பரவலை தடுப்பது, புற்று நோய் சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சி, மலேரியா, டெங்கு, காசநோய் போன்ற நோய்களை வெல்வது ஆகிய வற்றுக்கு அதிக பலன் கிடைக்கும். பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒன்றாகப் பாடுபட விரும்புகின்றன.
இந்த பயணத்துக்குப் பிறகு, பாகிஸ்தான் விஷயத்தில் அமெரிக்க அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் எனக்கருதுகிறீர்கள்?
பயங்கரவாத பிரச்சினையில் பாகிஸ்தான், முயலுடன் ஓடியும் ஓநாயுடன் வேட்டை ஆடியும் இரட்டை வேடம் போடுகிறது. இத்துடன், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் முயற்சிகளை முறியடிப் பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாகிஸ்தானின் இத்தகைய தவறுகளை ஒபாமா அரசு கண்டுகொள்வதில்லை. இதில், அனைத்து அமைப்புகளிலும் இந்தியாவையும் பாகிஸ்தானையும் அமெரிக்கா சரிசமமாக பாவிப்பதுதான் படுமோசமானது. இந்த நிலை மாற வேண்டும்.
பிரதமரின் பயணத்தால் தளர்த்தப்பட இருக்கும் விசா விதிமுறைகள் என்ன?
இலங்கை, கென்யா போன்ற பல்வேறு நாடுகளில் உள்ளது போல், ‘நாட்டுக்கு வந்து இறங்கிய பின் விசா’ எனும் முறையை அமெரிக்கர்களுக்காக, இந்தியா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக மோடி அறிவித்துள்ளார். இதன்படி, அமெரிக்கர்கள் இங்குள்ள சில குறிப்பிட்ட விமான நிலையங்களுக்கு வந்து இறங்கிய பின் அவர்களின் தேவைகளை கேட்டறிந்து விசா அளிக்கப்படும்.
இதையே அமெரிக்காவும், இந்தியர்களுக்காக செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபரிடம் மோடி கூறியுள்ளார். இதனால், பணி செய்ய, படிக்க, தொழில் விஷயமாக என அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும். இவ்வாறு சேஷாத்திரி சாரி கூறினார்.