மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த எய்ம்ஸ் மருத்துவர்களின் மருத்துவ அறிக்கை இன்று வெளியாகி உள்ளது. இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாட்டின் உயரிய மருத்துவ நிறுவனமான எய்ம்ஸ் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
எய்ம்ஸ் சார்பில் அதன் மருத்துவர்கள் ஐந்து முறை விஜயம் செய்து பரிசோதித்த முன்னாள் முதல்வரின் மருத்துவ அறிக்கை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை எய்ம்ஸின் துணை இயக்குநர் வி.ஸ்ரீனிவாஸ், தமிழகத்தின் சுகாதாரம் மற்றும் மருத்துவநலத்துறையின் முதன்மை செயலாளர் டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணனிடம் டெல்லியில் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை கேட்டு தமிழக அரசு வேண்டி கேட்டுக் கொண்டதன் பேரில் எய்ம்ஸ், தன் 5 பேர் கொண்ட மருத்துவர் குழுவை அக்டோபர் 5, 2016 முதல் டிசம்பர் 6, 2016 வரை என ஐந்துமுறை சென்னைக்கு அனுப்பியிருந்தது. இக்குழுவிற்கு நுரையீரல் சிகிச்சை துறையின் பேராசிரியர் கில்னானி தலைமை வகித்தார். இதன் மருத்துவ அறிக்கையை தன் அலுவலக பதிவிற்காக அனுப்பி வைக்கும்படி கடந்த மார்ச் 5 ஆம் தேதி தமிழக அரசு வேண்டுகோள் அனுப்பியிருந்தது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 5-ம் தேதி இறந்தார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து சர்ச்சை கிளம்பி வருகிறது.
இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் 12 பேரும் கடந்த பிப்ரவரி 28 அன்று குடியரசுத் தலைவரை திடீர் என சந்தித்து புகார் மனு அளித்தனர். இந்தப் புகாருக்கு பதில் கேட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து மத்திய அரசு மூலமாக தமக்கு நோட்டீஸ் வரும் என தமிழக அரசு எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்காக அனுப்பப்பட உள்ள பதிலுக்கு ஆதாரமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எய்ம்ஸ் மருத்துவமனையில் கேட்டுப் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதன் அவசரம் மற்றும் முக்கியத்துவம் கருதி தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவ அறிக்கையை நேரில் பெற்றுச் செல்ல டெல்லி வந்திருந்ததாகவும் கருதப்படுகிறது.
ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறப்படும் புகாரை, பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தலைமையிலான அதிமுகவினர் கடுமையாக மறுத்து வருகின்றனர்.