இஸ்லாமியர்களின் மூன்று முறை தலாக் மற்றும் நிக்காஹ் ஹலாலா முறைகளை தடுக்க தனிநபர் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது.
‘முஸ்லிம் திருமண மசோதா 2016’ என்ற பெயரிலான இந்த மசோதாவை மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஹுசைன் தல்வால் கொண்டு வந்துள்ளார்.
இதுகுறித்து ஹுசைன் குறிப் பிடும்போது, “நமது அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், இராக், துருக்கி போன்ற இஸ்லாமிய நாடுகளில் விவாகரத்து சம்பந்தப்பட்ட சட்டங்களை ஒருங்கிணைத்துள்ள னர். இந்த ஒருங்கிணைப்புப் பட்டியலில் இந்தியாவும் விரைவில் சேர வேண்டும். அந்த நாடுகளில், இஸ்லாமியர்களின் தனிச் சட்டங் களின் ஒரு பகுதியான விவாகரத் தில் பெண்களுக்கு பாரபட்சமாக இருக்கும் பிரிவுகள் நீக்கப்பட்டுள் ளன” என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான ஹுசைன் தல்வால் இதுகுறித்து ‘தி இந்து’விடம் கூறும்போது, “இந்த மசோதா, திருமணம் ரத்தாகும் சூழ்நிலையில் ஆண் பெண் இடையே பாகுபாடின்மையை உறுதி செய்யும். அதேசமயம் இஸ்லாமி்யர்கள் தங்கள் மதத்தை கடைப்பிடிக்கவும், அந்த நம்பிக்கையின்படி வாழ்க்கை நடத்தவும் உள்ள உரிமைகள் மீறாது இருப்பதையும் பாதுகாக்கும். குர்-ஆனில் கூறப்பட்டுள்ளதை தவறாக புரிந்துகொண்டதன் விளைவே தற்போதைய நடைமுறைக்கு காரணம்” என்றார்.
மணமான முஸ்லிம் பெண்களிடம் அவர்களுடைய கணவன்மார்கள் நேரில் வராமல் மூன்று முறை தலாக் கூறி செய்யும் விவாகரத்து முறைக்கு பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் இடையே பல ஆண்டுகளாக எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதில் நவீன காலத்துக்கு ஏற்றபடி, முஸ்லிம் கணவன்மார்கள் தங்கள் மனைவிகளிடம் தொலைபேசி, குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகவும் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்து விடுகின்றனர்.
இதேபோல் நிக்காஹ் ஹலாலா என்பது, விவாகரத்து செய்த தம்பதிகள் மீண்டும் மணம் புரிந்து சேர்ந்து வாழ்வதற்கான நடைமுறையாகும். இதில் பெண் மட்டும் வேறு ஒருவரை மணம் புரிந்து அவரை உடனடியாக விவாகரத்து செய்துவிட்ட பிறகுதான் தனது கணவரை மீண்டும் மணம் செய்ய முடியும். பெண்களுக்கு மிகவும் பாதகமானதாகக் கருதப்படும் இவ்விரு முறைகளினால் பெண்கள் மிக அதிகமாக பாதிக்கப்படுவதுடன் அவர்களின் திருமண வாழ்க்கை பாதுகாப்பற்றதாகவும் ஆகி வருகிறது.
இந்தப் பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் ஆலோசனை செய்து வருகிறது.