இந்தியா

பாலியல் புகார்: தேஜ்பாலை கைது செய்ய இடைக்காலத் தடை

செய்திப்பிரிவு

பாலியல் புகாரில் சிக்கியுள்ள தெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பாலை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தது பனாஜி நீதிமன்றம்.

தருண் தேஜ்பாலை நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி வரை கைது செய்யக்கூடாது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருண் தேஜ்பால் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனால், கோவா போலீஸின் கைது நடவடிக்கையில் இருந்து தற்காலிக நிம்மதியைப் பெற்றிருக்கிறார் தருண் தேஜ்பால்.

டெல்லியில் இருந்து புறப்பட்ட தருண் தேஜ்பால் இன்று பிற்பகலில் கோவா விமான நிலையம் வந்தடைந்தார்.

முன்னதாக, தெற்கு டெல்லியில் உள்ள தருண் தேஜ்பால் வீட்டில் இன்று காலை 6 மணி தொடங்கி ஒன்றரை மணி நேரம் கோவா போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அவரது வீட்டில் சோதனை நடைபெற்றபோது தேஜ்பால் அங்கு இல்லை.

அவரது மனைவி கீதன் பத்ராவிடம் விசாரித்ததில், அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். இதனையடுத்து, கோவா போலீசாரும், டெல்லி போலீசாரும் இணைந்து தேஜ்பாலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, முன் ஜாமீன் கோரி பனாஜி செசன்ஸ் நீதிமன்றத்தில் தேஜ்பாலின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், பிற்பகல் 2.30 மணி வரை அவரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து பனாஜி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தருண் தேஜ்பால் முன் ஜாமீன் மனு மீது மீண்டும் விசாரணையைத் தொடங்கிய நீதிமன்றம், அவரைக் கைது செய்ய நாளை காலை 10 மணி வரை இடைக்காலத் தடை விதித்தது.

SCROLL FOR NEXT