இந்தியா

பாஜகவில் இருந்து சபீர் அலி நீக்கம்: கட்சியில் இணைந்த ஒரேநாளில் நடவடிக்கை

செய்திப்பிரிவு

பாஜகவில் இணைந்த சபீர் அலி ஒரேநாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு காரணமாக அவரது உறுப்பினர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆரம்பத்தில் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் மூத்த தலைவராக சபீர் அலி இருந்தார். அங்கிருந்து லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு தாவினார்.

பின்னர் 2011-ல் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு மாறினார். அந்தக் கட்சியில் இருந்து கொண்டு பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசினார். இதனால் கட்சியில் இருந்து அண்மையில் அவர் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அவர் பாஜகவில் இணைந்தார். ஆனால் பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

“இந்தியன் முஜாகிதீன் தீவிர வாத அமைப்பின் தலைவர் யாசின் பட்கலின் நண்பரான சபீர் அலி பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்து மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிமையும் ஏற்றுக் கொள்வார்கள்” என்று நக்வி கடுமையாக விமர்சித்தார்.

மும்பை தொழிலதிபர் குல்சன் குமார் கொலை வழக்கிலும் சபீர் அலி குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்று நக்வி சுட்டிக் காட்டினார்.

இதனிடையே ஆர்.எஸ்.எஸ். தேசிய செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் உள்ளிட்டோரும் சபீர் அலி பாஜகவில் சேர்க்கப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அவரது உறுப்பினர் சேர்க்கையை பாஜக நேற்று ரத்து செய்தது.

முன்னதாக சபீர் அலி நிருபர்களிடம் கூறியதாவது:

நான் தீவிரவாதி யாசின் பட்கலின் நண்பர் என்று கூறுகிறார்கள். அதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயாராக இருக்கிறேன். எனது உறுப்பினர் சேர்க்கையை நிறுத்தி வைக்குமாறு மாநில பாஜக தலைவர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றர்.

ரவி சங்கர் பிரசாத் அறிவிப்பு

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘சபீர் அலியின் உறுப்பினர் சேர்க்கையை ரத்து செய்ய பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும் கட்சித் தலைவர்கள் பகிரங்கமாக எந்த கருத்தையும் வெளியிட வேண்டாம், ஏதாவது அதிருப்தி இருந்தால் கட்சித் தலைமையிடம் நேரடியாக தெரி விக்கலாம் என்றும் அறிவுறுத் தியுள்ளார்’’ என்றார்.

SCROLL FOR NEXT