நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்துள்ள நிலையில், "இது அரசியல் நோக்கம் கொண்டது. இதனால் பெரிய அளவில் பலன் ஏற்படாது" என அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக பொருளாதாரத் துறை பேராசிரியர் நிஸார் அகமது கூறியுள்ளார்.
காமன்வெல்த் அமைப்பின் கல்வி உதவித்தொகையில் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்திலும் ஆய்வு மேற்கொண்டவரான இவர், பிரதமரின் அறிவிப்பு குறித்து 'தி இந்து' இணையதளப் பிரிவுக்கு அளித்த பேட்டி:
பிரதமர் மோடியின் அறிவிப்பால் என்ன பலன் கிடைக்கும்?
"பலரும் கூறுவது போல் பெரிய அளவில் பலன் கிடைக்காது. ஒரு குறுகிய காலத்துக்கு பின் மிகச் சிறிய அளவிலான பலனே கிட்டும். இதில், சிறிய அளவிலான வியாபாரிகள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் மட்டுமே சிக்குவார்கள். இவர்களில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் 1990-க்கு பின் உருவான புதிய பணக்கார சமூகத்தினர். இவர்களின் சுமார் 80 சதவிகித வியாபாரம் பணப்பரிவர்த்தனையில் நடைபெறுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தாம் விற்கும் சொத்துக்களின் மதிப்பை அதிகாரபூர்வமாகக் காட்டாதது தான் காரணம். இதனால், அரசு அறிவித்துள்ள நிபந்தனைகளின்படி இவர்களிடம் உள்ள கறுப்புப் பணம் வெள்ளையாக்குவது கடினம். திடீர் அறிவிப்பால் அவகாசம் கிடைக்காமல் கறுப்புப்பணத்தை தங்கமாக மாற்றவும் முடியாது. ஆனால், பெரிய வரி ஏய்ப்பாளர்கள் மீது எந்த தாக்கமும் ஏற்படாது. ஏனெனில், பெரிய கில்லாடிகளான இவர்கள், இதுபோன்ற அறிவிப்புகளை எந்நேரமும் எதிர்பார்த்து தயாராக இருப்பவர்கள். தங்கம், பினாமி சொத்து, பங்கு சந்தை மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பாதுகாக்கும் வழக்கம் உடையவர்கள். அதிரடி சோதனைகளிலும் அவர்கள் சிக்குவது கிடையாது."
அப்படி எனில், சிறிய வியாபாரிகளை குறிவைப்பதுதான் அரசின் இலக்கா?
"மக்களவைத் தேர்தலில் வெளிநாட்டு கறுப்புப் பணம் மீது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரதமரால் முடியவில்லை. அதை வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருப்பவர்கள் பெயரை கூட அவரால் வெளியிட முடியாமல் போனது. கறுப்புப் பணம் பதுக்கியவர்களுக்கு கடந்த செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்திருந்தது. இதிலும் எதிர்பார்த்த பலன் இல்லை. இந்த தோல்விகளால் தொடர்ந்து எதிர்க்கட்சிகளால் தாக்கப்பட்டு வந்தவர், அடுத்த சில மாதங்களில் ஐந்து மாநில தேர்தல்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதை சமாளிக்க அரசியல் காரணங்களுக்காக அவர் இதை அறிவிக்க வேண்டியது கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதில், வரி கட்டப்படாத ரொக்கப் பணம் அதிகம் வைத்துள்ள சிறிய வகை வியாபாரிகள் சிக்கி விட்டனர். வரவிருக்கும் சட்டப்பேரவைகளின் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு அதன் பிரச்சார செலவுகளில் பாதிப்பு இருக்கும்."
ரூபாய் நோட்டுகள் குறித்த பிரதமர் அறிவிப்பில் குறைபாடுகள் என எவற்றைப் பார்க்கிறீர்கள்?
"இதுபோன்ற அறிவிப்பு திடீர் என்று அளிப்பதுதான் சரி. ஆனால், பொதுமக்களின் தேவைக்கு ஏற்ற சில்லரை ரூபாய் நோட்டுகள், ஏடிஎம் மற்றும் வங்கி சேவை இல்லாத நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு அதிக இன்னல்கள் இருக்கும். குறைந்தபட்சம் அறிவிப்பிற்கு முன்பாக ஒரு கணக்கெடுப்பாவது அரசு நடத்தி இருக்க வேண்டும். காய்கறி, மளிகை என பல்வேறு வகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் கடன் அல்லது பண அட்டையின் பரிவர்த்தனை செய்யும் வசதி ஏற்படுத்திய பின் செய்திருக்க வேண்டும். அதேசமயம், ஒருபக்கம் பணபரிவர்த்தனை குறைப்பு எனக் கூறி விட்டு மீண்டும் புதிய 500 சேர்த்து 2000 ரூபாய் நோட்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம், கறுப்புப்பணம் அதிகரிக்கும். இது, உருவாக்கும் காரணிகளை கண்டுபிடித்து ஒழிப்பதால் தான் அவை நிரந்தரமாக அழிக்க முடியும். இதை செய்யவில்லை எனில் எத்தனை தடைகளுக்கு போட்டாலும், காரணிகளால் கறுப்புப் பணம் கண்டிப்பாக உருவாகிக் கொண்டே இருக்கும்."
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக பொருளாதாரத் துறை பேராசிரியர் நிஸார் அகமது
இந்த நடவடிக்கையால் மத்திய அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுவிடாதா?
"அரசை விட பாஜகவுக்கு அதிகமான பின்னடைவும் ஏற்படும். சுமார் மூன்று வருடங்களுக்கு நம் நாட்டின் பொருளாதாரத்தில் இந்த அறிவிப்பின் தாக்கம் இருக்கும். இது குறிப்பாக வரவுள்ள தேர்தலில் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். ஏனெனில், கறுப்புப் பணத்தில் வியாபாரம் செய்து வந்த சிறிய வகை வியாபாரிகள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் பாஜக மீது வெறுப்பை காட்ட வாய்ப்புகள் அதிகம். நிலம், வீடுகள் விற்பனை குறைந்து அதன் விலையும் குறையும். வெளிநாடுகளிலிருந்து பணம் வருவது தடை செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான என்.ஜி.ஓ.க்களும் எதிர்ப்பை காட்டுவார்கள். இவர்கள் அனைவரது சார்பு வாக்குகளையும் பாஜக வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல்களில் இழக்கும் வாய்ப்புகள் உள்ளது."
கள்ளநோட்டு புழக்கமும் இந்த நடவடிக்கையால் தடுப்பதற்காக அரசு கூறுகிறதே...
"அதிகமான அளவிலான புழக்கத்தில் புகுந்துள்ள ரூ.500 கள்ளநோட்டுகள் கண்டிப்பாகத் தடுக்கப்படும். ஆனால், அது தற்காலிகமானதாகத்தான் இருக்கும். ஏனெனில், கள்ளநோட்டுக்காரர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தான், நேபாளம் உட்பட சில நாடுகளை சேர்ந்தவர்கள் புதிய நோட்டுகளையும் அச்சடிக்க முயல்வார்கள். கறுப்புப் பணம் மற்றும் கள்ளநோட்டு காரணங்களுக்காகவே மோடி பிரதமரான பின் 2014-ல் ரிசர்வ் வங்கி 2005 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட 500 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என அறிவித்தது. ஆனால், இதில் பெரிய அளவில் கறுப்புப் பணம் சிக்காததுடன், மீண்டும் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் உடனடியாகப் புழக்கத்தில் வந்தன. இந்த நிலை மீண்டும் ஏற்படாது என்பதும் உறுதி இல்லை."
நம் நாட்டில் இதற்கு முன் ரூபாய் நோட்டுகள் எத்தனை முறை தடை செய்யப்பட்டன? அதன் தாக்கம் என்ன?
1938-ல் ரிசர்வ் வங்கியால் 1000, 5,000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை 1946-ல் ஆங்கிலேயர்கள் தடை செய்தனர். பிறகு 1954-ல் இருந்த காங்கிரஸ் அரசு அந்த மூன்று நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தியது. பிறகு, 1970 ஆம் ஆண்டில் நேரடி வரி விதிப்பை விசாரிக்க வான்ச்சு குழு அமைக்கப்பட்டது. இது, நம் நாட்டில் அதிகம் சேர்ந்து விட்ட கறுப்புப் பணத்தை தடுக்கும் பொருட்டு 1000, 5000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய பரிந்துரைத்தது. வான்ச்சு குழுவின் பரிந்துரை, அப்போது பெரிய அளவில் செய்தியாக வெளியானது. இதன் காரணமாக கறுப்புப்பணம் வைத்திருந்தவர்கள் அதை உருமாற்றி பாதுகாத்து கொண்டனர். இதனால், அந்த ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிப்பதில் பயன் இல்லை என காங்கிரஸ் அரசு பின்வாங்கியது.
எனினும், நெருக்கடி நிலைக்கு பின் ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு, காங்கிரஸை எதிர்க்கவும், அரசியல் காரணங்களுக்காகவும் அந்த மூன்று வகை நோட்டுகளும் செல்லாது என 1978-ல் அறிவித்து விட்டது. இதற்கு அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ஐ.ஜி பட்டேல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையும் மீறி செய்யப்பட்ட தடையால் கறுப்புப் பணம் மீது எந்த தாக்கமும் ஏற்படவில்லை. இதற்கு அந்த நோட்டுகளை பெரும்பாலனவர்கள் தம் கண்களில் கூடப் பார்க்காமல் இருந்ததும் காரணமாக இருந்தது. அதன் பிறகு தற்போது தடை செய்யப்பட்டுள்ளது."
பிரதமர் அறிவிப்பின் பலன் எப்போது தெரியும்?
"ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 2016 வரை 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ள சதவிகிதம் முறையே 47.8 மற்றும் 38.66 என உள்ளது. இரண்டும் சேர்த்து புழக்கத்தில் உள்ள சுமார் 86 சதவிகித நோட்டுகள் தற்போது தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் வங்கிகளின் கணக்கில் வருவது போக மீதியே கறுப்புப் பணம் ஆகும். இதன் முழுக்கணக்கு, அரசு அளித்துள்ள கடைசி கால அவகாசமான மார்ச் 31-ல் தெரிய வேண்டும். அதில், இப்பணத்தை அச்சிட ஏற்பட்டிருக்கும் பெரும் செலவையும் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம். இதில் புழக்கத்தில் இருந்த கள்ளநோட்டுகளும் தடுக்கப்படும். ஆனால், அவற்றின் எண்ணிக்கை எவ்வளவு என்பது வெளியில் தெரிய வாய்ப்புகள் இல்லை."