சட்ட விரோத இறைச்சி நிலையங்கள் மீது கடும் நடவடிக்கைப் பாய்ந்துள்ளதையடுத்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் இறைச்சி விற்பனையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வியாழன் மாலை முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இறைச்சி விற்பனையாளர்கள் சந்தித்தனர். சந்திப்புக்குப் பிறகு வியாபாரிகள் முதல்வர் ஆதித்யநாத்துக்கு ஆதரவு தெரிவித்ததாக மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங் கூறுகிறார்.
மாட்டிறைச்சி நிலையங்கள் மீது மட்டுமல்லாது, மீன், கோழி இறைச்சி விற்பவர்களையும் போலீஸ் தொந்தரவு செய்து வருவதால் போராட்டம் செய்ய முடிவெடுத்தனர்.
ஊடகங்களிலும் செய்திகளும், கண்டனங்களும் வெளியானதையடுத்து முதல்வர் விளக்கம் அளிக்கையில், “சட்ட விரோத இறைச்சி உற்பத்தி நிலையங்களை மட்டும் மூடுமாறுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும், முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்பவர்களை தொந்தரவு செய்யக் கூடாது” என்று உத்தரவிட்டிருந்தார்.
யோகி ஆதித்யாநாத்தின் இறைச்சி நடவடிக்கையை, அனைத்திந்திய இறைச்சி வணிக கூட்டமைப்பாளர்கள் ஆதரித்துள்ளனர். அதாவது முதல்வர் ‘ராஜ தர்மத்தை’ கடைபிடிப்பதாக அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதாவது பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சியினர்தான் இறைச்சி வியாபாரிகளுக்கு அநீதி இழைத்ததாக அனைத்திந்திய இறைச்சி வணிக சங்கக் கூட்டமைப்பு தெரிவித்ததாக பிடிஐ செய்தி ஒன்றும் தெரிவித்துள்ளது.