சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முழுமையாக விடுபட வேண்டி கர்நாடக மாநில அதிமுக செயலாளர் வா.புகழேந்தி தலைமையில் அக்கட்சியினர் மைசூர் சாமூண்டீஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர்.
சாமுண்டீஸ்வரி ஜெயலலிதாவின் குலதெய்வம் என்பதால் அந்த கோயில் பிரசாதத்தை நேரடியாக அவருக்கே வழங்க கர்நாடக அதிமுகவினர் போயஸ்கார்டனுக்கு கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 17-ம் தேதி அவருக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மறுநாள் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் வா.புகழேந்தி தலைமையில் அக்கட்சியினர் மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்றனர்.அப்போது வழக்கில் இருந்து ஜெயலலிதா முழுமையாக விடுபட வேண்டும். மேல் முறையீட்டில் அவர் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜை செய்தனர்.சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த பூஜையில் ஜெயலலிதா பெயரில் அர்ச்சனையும் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து சாமுண்டீஸ்வரி கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை பெற்றுக்கொண்ட புகழேந்தி விமானம் மூலம் சென்னை சென்றுள்ளார்.போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பிரசாதம் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.
ஜெயலலிதாவின் மூதாதையர்கள் மைசூர் அருகே உள்ள மேல்கோட்டையில் வாழ்ந்தவர்கள். இதனால் மைசூர் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி ஜெயலலிதாவின் குலதெய்வமாக வணங்கப்படுகிறது. எனவே அவர் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளுக்கு முன் அங்கு சென்று சிறப்பு பூஜையில் ஈடுபடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.