டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 5 பேர் உயிரிழந்தனர்.
இதனால் இந்த ஆண்டு டெல்லியில் இதுவரை டெங்குக்கு பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 1,150 பேர் டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய எய்ம்ஸ் அதிகாரி ஒருவர், "செப்டம்பர் 1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை எய்ம்ஸ் மருத்துவமனையில் டெங்கு நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 5 பேர் பலியாகினர்" என்றார்.
இதுதவிர வேறு அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இறந்தவர்களையும் சேர்ந்து டெல்லியில் டெங்கு பலி 14 ஆக அதிகரித்துள்ளது.
1,440 பேருக்கு சிக்குன் குனியா:
டெல்லியில் செப்டம்பர் 13-வரை எடுக்கப்பட்ட கணக்கின்படி 1440 பேருக்கு சிக்குன் குனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,158 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை மட்டுமே 390 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்கிறது புள்ளிவிவரம்.