இந்தியா

ஹிண்டால்கோ கோப்புகளை கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு சிபிஐ கடிதம்

செய்திப்பிரிவு

ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு செய்தது தொடர்பான ஆவணங்களை தருமாறு பிரதமர் அலுவலகத்துக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள தலாபிரா நிலக்கரிச் சுரங்கத்தை ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு முறைகேடாக ஒதுக்கியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்.) தொழிலதிபர் கே.எம்.பிர்லா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பேட்டியளித்த பி.சி.பரேக், “அந்த நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் இறுதி முடிவு எடுத்தது பிரதமர் மன்மோகன் சிங்தான்” என்று குற்றம் சாட்டியிருந்தார். பிரதமர் அலுவலகம் அளித்த விளக்கத் தில், ‘தகுதியின் அடிப்படையிலேயே ஹிண்டால்கோவுக்கு நிலக்கரிச் சுரங்கத்தை ஒதுக்கீடு செய்ததாக தெரிவிக்கப்பட்டது. விசாரணை நிலையறிக்கை நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளின் விசாரணையை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணித்து வருகிறது.

சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட ஹிண்டால்கோ மீதான வழக்கு உள்ளிட்ட 14 வழக்குகள் தொடர்பான விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சிபிஐ செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, இந்த வழக்கில் சிபிஐயின் செயல்பாடு மந்தமாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் விமர்சித்தது.

இன்னும் வேகமாக விசாரணையை நடத்த வேண்டும் என்றும், வரும் டிசம்பருக்குள் அனைத்து வழக்குகளின் விசாரணையையும் நிறைவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர். பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் இந்நிலையில், ஹிண்டால்கோவுக்கு நிலக்கரிச் சுரங்கத்தை ஒதுக்கீடு செய்தது தொடர்பான கோப்புகளை அளிக்குமாறு பிரதமர் அலுவலகத்துக்கு சிபிஐ செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பியுள்ளது.

ஹிண்டால்கோ உள்ளிட்ட வழக்குகளின் விசாரணை தொடர்பான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில், அது தொடர்பான ஆவணங்களை கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். இப்போதைக்கு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய இணையமைச்சர் வி.நாராயணசாமி, “எங்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. ஏற்கெனவே ஆயிரக்கணக்கான ஆவணங்களை சிபிஐயிடம் அளித்துள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT