காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவிடம் இருந்து பிரிந்து வாழும் அவரது மனைவி பாயல் தனது இரு மகன்களுடன் டெல்லியில் உள்ள அரசு பங்களாவில் 1999 முதல் வசித்து வருகிறார். அக்பர் சாலையில் உள்ள அந்த அரசு பங்களாவை காலி செய்யும் படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித் தும் அவர் இதுவரை காலி செய்ய முன் வரவில்லை.
இந்நிலையில் விசாரணை நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து பாயல் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் யப்பட்டது. அதில் காஷ்மீர் தீவிர வாதிகளால் தனது குடும்பத்தின ருக்கு அச்சறுத்தல் இருப்பதால், அரசு பங்களாவை காலி செய்ய முடியாது என்றும், வேண்டுமென்றால் அதற்கு மாற்றாக பாதுகாப் பான வீட்டை ஒதுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு நேற்று நீதிபதி இந்தர்மீத் கவுர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அனுராக் அலுவாலியா, ‘‘அவர் வீடு மாறினாலும் அந்த வீட்டுக்கு டெல்லி போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்குவார்கள்’’ என வாதாடினார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ‘‘நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் முன் கண்ணியத்துடன் அரசு பங்களாவை பாயல் காலி செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டார்.