இந்தியா

மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கர்நாடக முதல்வர் சித்தராமையா

இரா.வினோத்

கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூரு குதிரைப் பந்தய மைதான கிளப்பில் கமிட்டி உறுப்பினரை நியமிக்க ரூ.1.3 கோடி பெற்றதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் பாஸ்கரன் கூறியதாவது:

கடந்த 2014-ம் ஆண்டு தொழிலதிபர் எல். விவேகானந்தா பெங்களூரு குதிரைப் பந்தய மைதான கிளப்பில் கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்துக்காக முதல்வர் சித்தராமையாவுக்கு பல கோடி பேரம் பேசப்பட்டது. இறுதியாக கடந்த 28-7-2014-ல் சித்தராமையா வின் வங்கிக் கணக்கில் விவேகானந்தா ரூ.1.3 கோடியை செலுத்தியுள்ளார்.

பொது ஊழியரான முதல்வர் சித்தராமையா, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, பெங்களூரு குதிரைப் பந்தய மைதான கிளப்பில் கமிட்டி உறுப்பினரை நியமித்திருப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் புகார் அளித்துள்ளேன்.

இல்லாவிடில் அவருக்கு எதிராக வழக்கு தொடுக்க ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

இதுகுறித்து தொழிலபதிபர் எல். விவேகானந்தா கூறியதாவது:

இது அடிப்படை ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டு. எனது பெயருக்கும், முதல்வர் சித்தராமையாவின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இதை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு நானும் சித்தராமையாவும் நெருங்கிய நண்பர்கள் என்பதை பலரும் அறிவார்கள். பெங்களூரு குதிரைப் பந்தய மைதான கிளப் கமிட்டி உறுப்பினராக நான் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு நட்பின் அடிப்படையில் சித்தராமையா என்னிடம் கடனாக ஒரு தொகையைப் பெற்றார். அதனை உள்நோக்கத்துடன் பார்ப்பது தவறானது. இது தவிர, இந்தப் பதவியால் எவ்வித ஆதாயமும் இல்லை. அதற்காக கோடிக் கணக்கில் யாரும் லஞ்சம் கொடுக்கமாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆடம்பர கைக்கடிகார விவகாரம், மகனுக்கு அரசு ஒப்பந்தம் ஒதுக்கிய விவகாரம் என தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் சித்தராமையா, தற்போது குதிரைப் பந்தய கிளப் விவகாரத்தில் சிக்கி இருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

SCROLL FOR NEXT