இந்தியா

பதவி விலகினார் தெஹல்கா நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரி

செய்திப்பிரிவு

தெஹல்கா வார இதழ் நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரி தன் பதவியை ராஜினாமா செய்தார். தெஹல்கா இதழின் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுப் புகார் தெரிவித்ததை அடுத்து அவர் தன் பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு விலகியிருக்கப் போவதாக அறிவித்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலியல் அத்துமீறல் கோவா மாநிலத்தில் நடைபெற்றது என்பதால் கோவா போலீஸார் தருண் தேஜ்பால் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, தெஹல்கா நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரி உள்ளிட்ட 3 பேரிடம் கோவா போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கடந்த 24- ஆம் தேதி கோவா மாநில காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சாமி டவேரஸ் தலைமியிலான 4 பேர் கொண்ட கோவா போலீசார் தெஹல்கா நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரியிடம் விசாரணை மேற்கொண்டனர். 9 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது. மேலும் முக்கிய சாட்சியங்கள் 3 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

பெண் பத்திரிகையாளர் ராஜினாமா :

இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக , பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன் பணியை ராஜினாமா செய்தார். தெஹல்காவில் இனியும் தான் பணியாற்றுவதற்கான சூழல் இல்லை என அவர் தெரிவித்திருந்தார்.

தருண் தேஜ்பால் மீது பாலியல் புகார் எழுந்த பிறகு தெஹல்காவில் இருந்து ராஜினாமா செய்யும் 6-வது பத்திரிகையாளர் ஷோமா சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT