சிறார்களை பணியில் அமர்த்துபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வகை செய்யும் குழந்தை தொழிலாளர் (தடுப்பு மற்றும் முறைமை) திருத்த மசோதா இன்று (புதன்கிழமை) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
நாடு முழுவதும் குழந்தை தொழிலாளர்கள் முறையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தண்டனைகளை அதிகரிப்பதற்கான மசோதா மீது இன்று மக்களவையில் விவாதம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய எதிர்க் கட்சி உறுப்பினர்கள் சிறார்களை அவர்களது விருப்பத்தின் பேரில் குடும்பத் தொழிலில் ஈடுபடலாம் என்பது உட்பட சட்டத் திருத்த மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா சிறார்களை பணியில் அமர்த்துவதற்கான குறைந்தபட்ச அபராதத்தை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்த புதிய சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் தொடர்ந்து குழந்தை தொழிலாளர் சட்டத்தை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நீண்ட விவாதத்துக்குப் பின் குரல் வாக்கெடுப்பு மூலம் குழந்தை தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையில் ஏற்கெனவே இந்த சட்டத் திருத்த மசோதா நிறைவேறிவிட்டதால் விரைவில் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.