மகாராஷ்டிரா மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் குஜராத்தை விட முன்னேறி உள்ளது என காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாக்பூர் மாவட்டம் ராம்டெக் நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி எதுவுமே செய்யவில்லை என அவர்கள் (பாஜக) கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால், இந்த மாநிலம் எப்படி முன்னேறி இருக்க முடியும்?
பாஜக ஆட்சிக்கு வந்தால் குஜராத்தைப் போல மகாராஷ்டிரா வளர்ச்சி அடையும் என கூறுகிறார்கள். ஆனால், பொருளாதார வளர்ச்சியில் குஜராத்தைவிட மகாராஷ்டிரா முன்னணியில்தான் உள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
வன்முறை வேண்டாம் என்று போதித்த காந்தியடிகளைப் பற்றி சிலர் (நரேந்திர மோடி) பேசுகின்றனர். ஆனால் அவர்களது நடத்தை காந்தியடிகளின் எண்ணங்களுக்கு முற்றிலும் மாறாக இருக்கிறது. ஒருவரது சிலையைப் பார்த்து வணங்குவதற்கு பதில் அவரது எண்ணங்களை செயல்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கைகளால் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வேலை வாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் 100 நாட்களில் வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்போம் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றார் ராகுல் காந்தி.