இந்தியா

டெல்லியில் பிஹார் மதுவிலக்கின் தாக்கம்: பொது இடங்களில் புதிய மதுக்கடைகளுக்கு கேஜ்ரிவால் மறுப்பு

செய்திப்பிரிவு

பிஹாரில் கடந்த ஏப்ரல் 5 முதல் பூரண மதுவிலக்கை அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அமல் படுத்தியுள்ளார். இதன் தாக்கம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில் நேற்று முன்தினம் நடந்த டெல்லி அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட் டுள்ளன. இதில் டெல்லி அரசின் கலால் வரிக்கொள்கை 2016-ல் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. இதனால் டெல்லியில் மது விலையில் எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரியவந் துள்ளது.

மேலும் பொது இடங்களில் புதிய மதுக்கடைகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பொது இடங்களில் உள்ள மதுக் கடைகளில் மது அருந்துவோர் அவ்வழியாக செல்லும் பொது மக்களிடம் வம்பு செய்வதைத் தடுக்கவும் வகை செய்யப்பட் டுள்ளது. இவ்வாறு நடைபெறும் சட்டம் ஒழுங்கு சம்பவங்கள் மீது மதுக்கடை அருகில் உள்ள தெருக் களில் வசிப்பவர்கள் கூடிப் பேசி முடிவு எடுக்கவும் கேஜ்ரிவால் அரசு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து கேஜ்ரிவால் வெளி யிட்ட அறிவிப்பில், “டெல்லியில் பொது இடங்களில் உள்ள மதுக் கடைகள் மீது இந்த ஆண்டு அதிக புகார்கள் வந்துள்ளன.

இனி இதுபோன்ற புகார்கள் மீது கடைகளின் அருகிலுள்ள தெருக்களின் சபை கூடி, மதுக் கடையை இடமாற்றம் செய்வது அல்லது நிரந்தரமாக மூடுவது குறித்து முடிவு எடுக்கும். பொது இடங்களில் குடித்துவிட்டு சிலர் பெண்களை இழிவுபடுத்தும் போக்கால் அரசுக்கு இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற் பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக தனிப் பெரும் பான்மையுடன் ஆட்சிப் பொறுப் பேற்றவுடன் `மொஹல்லா சபா’ என்ற பெயரில் தெருக்களின் சபைகளைத் தொடங்கியது. வாக் காளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தெருக்கள் சபை அவ்வப் போது கூடிப்பேசி அளிக்கும் புகார்கள் மற்றும் குறைகள் மீது அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு சார்பிலும் ஓர் அதிகாரி கலந்துகொள்ளும் தெருக்கள் சபை கூட்டங்களுக்கு மக்கள் இடையே பலத்த வரவேற்பு நிலவுகிறது.

இது குறித்து `தி இந்து’விடம் டெல்லி அரசு அதிகாரிகள் கூறும் போது, “பொது இடங்களில் உள்ள மதுக்கடைகள் மீது அவற்றின் அருகில் வசிக்கும் 10 சதவீத வாக்காளர்கள் அளிக்கும் புகார் கள் தெருக்கள் சபை முன் வைக் கப்படும். இதில் குறைந்தபட்சம் 15 சதவீத வாக்காளர்கள் கலந்து கொண்டு, மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் எடுக்கும் முடிவு களின்படி அந்த மதுக்கடைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். அதேசமயம், பெண் உரிமையை மதிக்கும் பொருட்டு இந்தக் கூட்டங்களில் 33 சதவீத பெண்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்” என்றார்.

டெல்லி அரசின் இந்த புதிய முடிவால், பொது இடங்களில் உள்ள மதுக்கடைகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அவற்றின் உரிமையாளர்களே பொறுப்பு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இம்மாநிலத்தில் மது விநியோ கிக்கும் பணியை டெல்லி மாநில சுற்றுலா வளர்ச்சி நிறுவனம், டெல்லி மாநில பொது விநியோக நிறுவனம், டெல்லி மாநில தொழில் கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம் மற்றும் டெல்லி நுகர்வோர் கூட்டுறவு மொத்த வியாபார நிறுவனம் ஆகியவை செய்து வருகின்றன.

இவை சார்பில் 356 உள்நாட்டு மதுபானக் கடைகள், 104 சாராயக்கடைகள், 90 தனியார் மதுபான மற்றும் சாராயக் கடைகள் உள்ளன. இவை தவிர டெல்லியில் உள்ள ஷாப்பிங் மால்களிலும் சிறிய அளவிலான பல கடைகள் அமைந்துள்ளன.

SCROLL FOR NEXT