கறுப்புப் பணம் மற்றும் லஞ்சத்தை ஒழித்து கட்டுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள டிஜிட்டல் பணபரிவர்த்தனை திட்டத்துக்கு மக்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள் விளம்பர தூதர்களாக செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் (மன் கீ பாத்) என்ற பெயரில் அகில இந்திய வானொலியில் உரை நிகழ்த்தி வருகிறார். இந்த மாதத்துக்கான மனதில் குரல் நிகழச்சிக்காக அவர் பேசியதாவது:
நமது இளம் தலைமுறையினரிடையே விஞ்ஞானத்தின் மீதான ஈர்ப்பு அதிகரிக்க வேண்டும். தற்போது நாட்டுக்கு அதிக அளவில் விஞ்ஞானிகள் தேவை. சாமான்ய மக்களின் நலனை கருத்தி கொண்டு எளிமைப்படுத்தப்படும் விஞ்ஞானத்தால், ஒட்டுமொத்த மனித சமுதாயமும் பயன்பெறும்.
செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யானை வெற்றிகரமாக செலுத்தி நமது விஞ்ஞானிகள் சாதனை புரிந்தனர். அடுத்த சாதனையாக ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைகோள்களை வைத்து விண்ணில் செலுத்தி உலக விண்வெளித் துறையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளனர். அந்த செயற்கைகோள்கள் பல நாடுகளுக்கு சொந்தமானவை. எனினும் ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி வைத்த முதல் நாடு என்ற புதிய வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்துள்ளது.
அந்த செயற்கைகோள்களில் கார்டோசாட் -2டி நமது நாட்டுக்கு சொந்தமானது. அந்த செயற்கைகோள் அனுப்பி வைக்கும் படங்கள் மூலம் நாட்டில் உள்ள வளங்கள், உள்கட்டமைப்பு மற்றும் நகர்புற வளர்ச்சிக்கான திட்டமிடல் ஆகியவற்றை அடையாளம் கண்டு செயல்படுத்த முடியும்.
இதேபோல் இடைமறித்து அழிக்கும் ஏவுகணை சோதனையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பூமியின் மேல்மட்டத்தில் இருந்து 100 கி.மீ தொலைவில் இருக்கும் எதிரிகளின் ஏவுகணைகளை, நமது ஏவுகணையால் இடைமறித்து தாக்கி அழிக்க முடியும். இத்தகைய திறன் கொண்ட ஏவுகணைகள் வெறும் 5 நாடுகளிடம் மட்டுமே உள்ளன.
உணவு தானிய உற்பத்தியில் நமது விவசாய சகோதர, சகோதரிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர். அவர்களது உழைப்பால் உணவு தானியங்களின் உற்பத்தி புதிய சாதனையை எட்டிப்பிடித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் ஏறத்தாழ 2,700 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 8 சதவீதம் அதிகமாகும்.
டிஜிட்டல் பணபரிவர்த்தனை திட்டத்துக்கு மக்கள் அனைவரும் விளம்பர தூதர்களாக செயல்பட வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இதனை ஒரு இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டும். டிஜிட்டல் பணபரிவர்த்தனையால் கறுப்புப் பண புழக்கத்தை கண்காணிக்க முடியும். லஞ்சத்துக்கு எதிரான முக்கிய பங்களிப்பாக டிஜிட்டல் பணபரிவர்த்தனை இருக்கும்.
ரொக்க பணபரிவர்த்தனையில் இருந்து டிஜிட்டல் முறைக்கு மக்கள் மெல்ல மாறி வருகின்றனர். கடந்த இரு மாதங்களில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை மேற்கொண்டவர்களில் 10 லட்சம் பேருக்கு சன்மானம் வழங்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் வர்த்தகர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் பணபரிவர்த்தனை திட்டம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி நூறாவது நாளை எட்டவுள்ளது. அன்றைய தினம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 126-வது பிறந்த தினமாகும். எனவே அவரது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு வரும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக மொபைல் போன்களில் பீம் செயலியை 125 பேருக்கு டவுன்லோடு செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கண் பார்வையற்றவர்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு இந்த உரையின் போது பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார்.