கருணை மனு மீது முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதை வைத்து மரண தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த காரணம் சரியானதா என்பதை நாம் ஆராய வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் புதன்கிழமை கருத்து கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுப்பதில் ஏற்பட்ட நெடிய தாமதத்தை காரணம் கூறி தண்டனையை ஆயுளாக குறைத்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்தது.அது பற்றி பேசிய சிதம்பரம் மேற்சொன்ன கருத்தை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
3 குற்றவாளிகளின் தண்டனை குறைக்கப்பட்டது மகிழ்ச்சி என்றோ அல்லது மகிழ்ச்சி இல்லை என்றோ நான் சொல்லமாட்டேன். ராஜீவ் காந்தி கொடூரமான வகையில் கொல்லப்பட்டது என்றைக்குமே மிகப் பெரிய சோகம்தான். அந்த சோகம் எப்போதும் அகலாது. மூன்று குற்றவாளிகளையும் நிரபராதிகள் என உச்ச நீதிமன்றம் அறிவிக்கவில்லை.
நீண்ட தாமதம் ஏற்பட்டால் அதன் அடிப்படையில் மரண தண்டனையை குறைக்கலாம் என்கிற உச்ச நீதிமன்றத்தின் கருத்து பிரச்சினையானதுதான். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது 2000ம் ஆண்டில் இந்த கருணை மனு சென்றது. அவர்கள் 4 ஆண்டுகளாக அதைத் தொடவில்லை. முதல் முறையாக 2005ல் பரிசீலிக்கப்பட்டு குடிய ரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு 5 ஆண்டுகள் கிடந்தது.
நான் உள்துறை அமைச்சரா னதும் கிடப்பில் இருந்த கருணை மனுக்கள் திருப்பி அனுப்பப் பட்டது. ஒவ்வொன்றாக அவற்றை நான் பரிசீலித்தேன்.
எனவே தாமதம் காரணமாக தண்டனையை ஆயுளாக குறைக் கலாம் என்ற கருத்தானது சட்டம் சார்ந்த கேள்விகளை எழுப்புகிறது. இந்த கருத்து சரியானதா என்பதை நாம் ஆராயவேண்டும். தாமதம் காரண மாகவே தண்டனை குறைப்பு என்ற கருத்து என்னை வேதனை அடையச் செய்கிறது.
ஒரு வகையில், இந்த தாமதமே ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு வாழ்வு அளித்துள்ளது.
தாமதம் ஏற்படாதிருந்தால் இந்த கேள்வி எழ வாய்ப்பே இல்லை. இந்த வழக்கில் தாமதம் என்ற கருத்து அடிப்படையில் அமைந்த தீர்ப்பு பற்றி விவாதிக்கப்படும் என்றார் சிதம்பரம்.