இந்தியா

காவிரியில் விநாடிக்கு 2,000 கனஅடி நீர் மறு உத்தரவு வரும் வரை திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இரா.வினோத்

சட்டம் ஒழுங்கை காக்க அறிவுரை

காவிரியில் தமிழகத்துக்கு 2 ஆயிரம் கனஅடி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர் பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007 பிப்ரவரி 5-ம் தேதி இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் இடைக்கால மனுக்களையும் தாக்கல் செய்தன.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.என்.கான்வால்கர் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் தரப்பில் ஆஜரான‌ அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, காவிரி பாசனப்பகுதிகளில் ஆய்வு செய்த மத்திய உயர்நிலை தொழில்நுட்ப குழுவின் அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து முகுல் ரோத்கி வாதிடுகையில், “காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக க‌ர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கிடையே பிரச்சினை நிலவியது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக நாடாளுமன்றம் அனுபவம் வாய்ந்த நீதிபதியின் தலைமையில் காவிரி நடுவர் மன்றத்தை உருவாக்கியது. காவிரி விவகாரத்தை முழுமையாக ஆராய்ந்த நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு இறுதித் தீர்ப்பை வழங்கியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் செய்த‌ மேல்முறை யீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. இந்த மேல்முறை யீட்டு மனுக்கள் இந்திய அரசியல மைப்பு சட்டம் 262-ம் பிரிவு மற்றும் மாநிலங்களுக்கு இடை யேயான நதி நீர் பங்கீடு சட்டம் 1956-க்கு எதிரானது. நாடாளு மன்றத்தால் உருவாக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்க்க‌ மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணையானது.

இதேபோல காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக் குமாறு உத்தரவிட‌ உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஏற்பதா மறுப்பதா என்பதை நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க முடியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசே இறுதி முடிவை எடுக்க‌ முடியும்’’ என்றார்.

மத்திய அரசுக்கு எதிர்ப்பு

கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலி எஸ். நாரிமன், “ஒருவேளை காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு இயற்கை நியதிக்கு எதிராக இருந்தால் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய் வதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. நடுவர் மன்றத்தில் அங்கம் வகித்த நீதிபதிகள் தவறான தீர்ப்பை வழங்கி இருந்தால் அதனை விசாரித்து மாற்றி அமைக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 136-ம் பிரிவின்படி நாடாளு மன்றத்தால் உருவாக்கப்பட்ட நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மனுவை விசாரிக்க‌ உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. நீதியை நிலைநாட்ட உச்ச நீதிமன்றம் மேற்கொள்ளும் விசாரணையில் நாடாளுமன்றம் குறுக்கிட முடியாது. ஒருவேளை உச்ச நீதிமன்றத்தை காட்டிலும் நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் இருந்தால், உயர் நீதிமன்றங்களில் வெளியாகும் தீர்ப்புகளுக்கு எதிராக நாடாளு மன்றம் அவ்வப்போது புதிய சட்டங்களை உருவாக்கும் சூழல் ஏற்படுமே? எனவே உச்ச நீதிமன்றத்தின் நீதி பரிபாலனத்தை நாடாளுமன்ற அதிகாரம் கட்டுப் படுத்தாது. காவிரி தொடர்பான வழக்குகளை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை உருவாக்க வேண்டும்’’ என்றார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே,“காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பாதிக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் உள்ளது. இதில் மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட வேண்டும். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான மூன்று மாநில அரசுகளின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பது குறித்து தொடர்ந்து விசாரிக்கப்படும். அதே நேரம் காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடகா - தமிழகம் இடையே நிலவும் போக்கு ஏற்புடையதல்ல. இந்த விவகாரத் தால் எழுந்த வன்முறைகளை இரு மாநில அரசுகளும் தடுக்க தவறிவிட்டன.

நீதிமன்ற உத்தரவை மதித்து, இரு மாநில அரசுகளும் ச‌ட்டம் ஒழுங்கை முறையாகப் பேண வேண்டும். இரு மாநில மக்களும் மற்ற மாநிலத்தவரை மதித்து நடந்து கொள்ள வேண்டும். கடந்த 4-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீரை தொடர்ந்து திறந்து விட வேண்டும். இந்த வழக்கில் புதிய உத்தரவு வெளி யாகும் வரை கர்நாடக அரசு பழைய உத்தரவை பின்பற்றி நடக்க வேண்டும். மத்திய உயர்நிலை தொழில்நுட்ப குழு வழங்கிய அறிக்கையில் ஆட்சேபம் இருந் தால் இரு மாநில அரசுகளும் அதனை வரும் 25-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்’’ எனக் கூறி வ‌ழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT