தலைவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக வெளியிடப்படும் அரசு விளம்பரங்களில் மக்கள் பணம் தவறாக கையாளப்படுவதை தடுக்க வழிமுறைகள் வகுக்க உச்ச நீதிமன்றம் குழு அமைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. தற்போது நடைமுறையில் இல்ல வழிகாட்டுதல் முறைகள் போதுமானதாக இல்லாததால் புதிய வழிகாட்டுதல் முறைகளை உருவாக்குமாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற அமைத்த குழுவிற்கு தேசிய நீதித்துறை அகெடமியின் முன்னாள் இயக்குநர் என்.ஆர்.மாதவ மேனன் தலைமை வகிப்பார் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குழுவில் மக்களவை முன்னாள் செயலர் டி.கே.விஸ்வநாதன், மூத்த வழக்கறிஞர் ரஞ்ஜித் குமார் ஆகியோர் இடம்பெறுவார்கள் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இக்குழுவிற்கு தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வேண்டிய உதவிகளை செய்யும் என்றும் 3 வாரங்களுக்குள் இக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.