இந்தியா

புயல் நிவாரணப் பணிகள்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் அதிருப்தி

ஜி.நரசிம்மராவ்

ஆந்திராவில் புயல் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதில் அரசு துறைகள் மெத்தனத்துடன் செயல்பட்டு வருவதாக, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் புயல் கரையை கடந்தபோது வீசிய பலத்த காற்றால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள், செல்போன் கோபுரங்கள் சாய்ந்தன. சில இடங்களில் வீடு மற்றும் கடைகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. இதனால் மின்சாரம், தகவல் தொடர்பு சேவை அங்கு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

குறிப்பாக விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மின்சார கம்பங்களும், தொலைபேசி கம்பங்களும் சாய்ந்தன. இதனால் நகரம் இருளில் மூழ்கியது. மாநிலத்தின் முக்கிய நிதி ஆதாரமாக கருதப்படும் விசாகப்பட்டினத்தில் வர்த்தகம் முற்றிலுமாக முடங்கி உள்ளது.

இந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் இன்று இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நிவாரணப் பணிகள் முற்றிலும் கவலை அளிப்பதாக தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஹுத்ஹுத் புயல் இங்கு மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இயல்பு நிலைக்கு விசாகப்பட்டின நகரம் திரும்புவதற்கு இங்கு உள்ள ஒவ்வொருவரும் போர்க்கால அடிப்படையில் போராடினால் மட்டுமே முன்னேற்றம் ஏற்படும்.

ஆனால், நடக்க வேண்டிய நிவாரணப் பணிகள் சரிவர நடக்கவில்லை. கிழக்கு ஆந்திராவில் உள்ள எரிசக்தி கழகத்தை தவிர இங்கு வேறு எந்த ஓர் அரசு நிர்வாகமும் செயல்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் இதற்கு பதில் கூறுவதற்கான கூட்டத்தில் பங்கேற்க சம்மன் அனுப்பப்படும். அவர்கள் வர தவறினால் கைது செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்" என்றார்.

ஆந்திராவில் ஹுத்ஹுத் புயல் பாதிப்பு குறித்து விசாகப்பட்டினத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) பார்வையிடுகிறார். அவரை வரவேற்பதற்காக விமான நிலையம் செல்லும் முன்னர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இதனைத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT