இந்தியா

நம்பிக்கை இழந்த நிலையில் காங்கிரஸ்: பா.ஜ.க கருத்து

செய்திப்பிரிவு

சிஎன்என் ஐபிஎன், சிஎஸ்டிஎஸ், தி வீக் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு 136 முதல் 146 இடங்கள், காங்கிரஸுக்கு 67 முதல் 77 இடங்கள், சத்தீஸ்கரில் பாஜகவுக்கு 45 – 55 இடங்கள், காங்கிரஸூக்கு 32 – 40 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டுடேஸ் சாணக்யா’ நடத்திய கருத்துக் கணிப்பில் ராஜஸ்தானில் பாஜகவுக்கு 151 இடங்களும், காங்கிரஸுக்கு 39 இடங்களும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கருத்துக் கணிப்புகளை வரவேற்று பாஜக தலைவர்களும், இவை நம்பத் தகுந்தவை அல்ல என்று காங்கிரஸ் கட்சி தலைவர்களும் பேசி வருகின்றனர்.

பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜேட்லி ‘பேஸ்புக்’ இணையதளத்தில் கூறியிருப்பதாவது:

“வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் சிறிய அளவில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளன. ஆனால், அதே சமயம் தேர்தல் முடிவுகளின் நிலவரத்தை ஓரளவு அதன் மூலம் கணிக்க முடியும்.

தற்போது நடைபெற்றுள்ள சட்டமன்றத் தேர்தல்களின் கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அக்கட்சி நம்பிக்கை இழந்தும், கட்டுப்பாட்டை இழந்தும் காணப்படுகிறது. இப்போதே இப்படி என்றால், தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு அந்த கட்சியின் நிலை எப்படி இருக்குமோ தெரியவில்லை.

ஒரு பரம்பரையை மட்டுமே நம்பியிருப்பது அரசியலில் நீண்ட காலம் பலன் அளிக்காது.

காங்கிரஸ் கட்சியினர் தங்களைத் தாங்களே கேள்வி கேட்டுக் கொண்டு, விடை தேட வேண்டிய நேரம் இது” என்றார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியதாவது:

“வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறும் முடிவுகள் ஏற்புடையதல்ல. அவற்றை குப்பைத் தொட்டியில் போட வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT