இந்தியா

புல்லரின் மரண தண்டனை: ஆயுளாக்க ஆட்சேபம் இல்லை; உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

செய்திப்பிரிவு

காலிஸ்தான் தீவிரவாதி தேவேந் தர்பால் சிங் புல்லரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைப்பதில் ஆட்சேபம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புல்லரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைக்கக் கோரி அவரது மனைவி நவ்னீத் கவுர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பு வெளியாகும்வரை மரண தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த மத்திய அரசு, புல்லரின் கருணை மனு இன்னமும் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்தது. இதனிடையே அவரின் கருணை மனு குறித்து மார்ச் 27-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும், இல்லையெனில் நீதிமன்றமே முடிவு செய்யும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி பி. சதாசிவம், ஆர்.எம்.லோதா, எச்.எல். தத்து, எஸ்.ஜே. முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி ஆஜரானார்.

“தேவேந்தர்பால் சிங் புல்லரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைப்பதில் மத்திய அரசுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. இதுதொடர்பாக ஜனவரி 21-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றுகிறோம்” என்று வாஹன்வதி தெரிவித்தார்.

இந்த வழக்கில் வரும் 31-ம் தேதி ஓர் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

1993 செப்டம்பரில் டெல்லியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட காலிஸ்தான் விடுதலைப்படை என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தேவேந்தர்சிங் புல்லருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தேவேந்தர்பால் சிங் புல்லரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைப்பதில் மத்திய அரசுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. இதுதொடர்பாக ஜனவரி 21-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றுகிறோம்

SCROLL FOR NEXT