டெல்லியில் உள்ள ராம்ஜாஸ் கல்லூரி நடத்தும் கருத்தரங்கில் ஜே.என்.யூ. மாணவர்கள் உமர் காலித், ஷேலா ரஷீத் பங்குபெற அழைப்பு விடுத்த விவகாரம் காரணமாக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அகில்பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டவரை எப்படி கருத்தரங்குக்கு அழைக்கலாம் என்று ஏபிவிபி அமைப்பினர் கருத்தரங்கு அறையை பூட்டி ஜன்னல் மீது கற்களால் தாக்குதல் தொடுத்தனர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் உமர் காலித், ரஷீத் ஆகியோருக்கு பங்கேற்பை ரத்து செய்தது.
இதனையடுத்து இடதுசாரி ஆதரவு அனைத்திந்திய மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் கல்லூரி நிர்வாகம் ஏபிவிபிக்கு அடிபணிந்ததை எதிர்த்தனர். மாரிஸ் நகர் காவல்நிலையம் நோக்கி ஏபிவிபி மீது நடவடிக்கை கோரி ஊர்வலம் செல்ல முடிவெடுத்தனர்.
ஆனால் இந்த போராட்ட ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பிரச்சினை தீவிரமடைந்தது. போலீஸார் இவர்கள் மீது தடியடி நடத்தினர்.
ஊர்வலம் செல்லவிடாமல் தடுத்த அகில்பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கல்லூரிக்குள் வைத்துப் பூட்டினர்.
இதனையடுத்து அனைத்திந்திய மாணவர்கள் அமைப்பினர் ஏறிக்குதித்து அடைக்கப்பட்ட மாணவர்களையும் ஆசிரியர்களையும் விடுவிக்க முயன்றனர்.
“மாணவர்களை அடைத்து வைத்தனர், வெளியே வர முயன்றவர்களை ஏபிவிபி அடியாட்கள் அடித்து உதைத்தனர். நாங்கள் உள்ளே புகுந்து காப்பாற்ற முயற்சி செய்தோம், எங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். அவர்கள் ஹாக்கி தடிகளுடன் முன் கூட்டியே தயாரிப்புடனேயே வந்துள்ளனர்” என்று அனைத்திந்திய மாணவர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவங்களினால் ராம்ஜாஸ் கல்லூரி பரபரப்பாக காணப்படுகிறது.