நடிகர்கள் பவன் கல்யாண், ஜூனியர் என்டிஆர் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் பவன் கல்யாணின் தீவிர ரசிகர் கொலை செய்யப்பட்டார். உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தினரை நடிகர் பவன் கல்யாண் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
திருப்பதி பைராகி பட்டடா பகுதியை சேர்ந்தவர் வினோத் (24). பொறியியல் பட்டதாரியான இவர் 2 மாதங்களில் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல இருந்தார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாணின் தீவிர ரசிகர் ஆவார்.
கடந்த 21-ம் தேதி கர்நாடக மாநிலம், கோலாரில் உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி நடிகர் சுமன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வினோத் தனது நண்பர்களுடன் சென்றார். இதில் நடிகர் ஜூனியர் என்டிஆரின் ரசிகர்களும் பங்கேற்றனர். அப்போது பவன் கல்யாண் ரசிகர்களுக்கு ஜூனியர் என்டிஆரின் ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அன்றிரவு இருதரப்பினரும் கோலாரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வினோத்துக்கும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் சுனில், அக்ஷய் ஆகியோருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. யாரும் எதிர்பாராத நேரத்தில் வினோத்தை, அக்ஷய் கத்தியால் குத்தியுள்ளார். இதில் வினோத் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே வினோத் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கோலார் போலீஸார் வழக்கு பதிவு செய்து சுனில், அக்ஷய் ஆகியோரை கைது செய்தனர்.
இதனை அறிந்த நடிகர் பவன் கல்யாண் நேற்று திருப்பதிக்கு வந்தார். அவர் ரசிகர் வினோத்தின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.