இந்தியா

ஆக்ரா ரயில் நிலையம் அருகே மர்மப் பொருள் வெடிப்பு

பிடிஐ

ஆக்ராவின் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகே இன்று (சனிக்கிழமை) காலை அடுத்தடுத்து இரண்டு இடங்களில் மர்மப் பொருள் வெடித்தது. இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. இருப்பினும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே கோட்ட மேலாளர் பிரபாஸ் குமார் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "ஆக்ராவின் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) காலை அடுத்தடுத்து இரண்டு இடங்களில் மர்மப் பொருள் வெடித்தது. இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. உத்தரப் பிரதேச போலீஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். தடயவியல் நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

சென்னை - ஜம்மு ரயில் தப்பியது:

முன்னதாக, நேற்று மாலை ஆக்ரா ரயில் நிலையத்திலிருந்து 20 கி,மீ. தூரத்தில் சென்னையிலிருந்து ஜம்மு சென்று கொண்டிருந்த அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு பெரும் பாறாங்கல் மீது மோதியது. தண்டவாளத்தில் பாறங்கல் கிடப்பதை தூரத்திலிருந்தே கவனித்துவிட்ட ரயில் ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு பிரேக் அழுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த இடத்திலிருந்து தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை குறிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று ஆக்ராவின் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகே மர்மப் பொருள் வெடித்துள்ளது.

தாஜ்மகாலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் மிரட்டல் எதிரொலியாக தாஜ்மகாலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

‘அவால் உம்மத் மீடியா சென்டர்’ என்ற ஐ.எஸ். சார்பு ஊடகக் குழு கடந்த 14-ம் தேதி, கிராபிக் படம் ஒன்றை வெளியிட்டது. புதிய இலக்கு என்ற தலைப்பிலான அந்தப் படத்தில் தாஜ்மகால் இடம்பெற்றுள்ளது. சீருடை அணிந்த தீவிரவாதி ஒருவர் கையில் துப்பாக்கி மற்றும் ஏவுகணையுடன் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது தாஜ் மகாலை முக்கிய இலக்காக வைத்து இந்தியாவில் தாக்குதல் நடத்துவோம் என ஐ.எஸ். விடுத்த மிரட்டலாக கருதப்படுகிறது.

இந்நிலையில் ஆக்ராவில் தாஜ்மகால் அமைந்துள்ள யமுனை நதிக்கரையில் உ.பி. போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். மேலும் கண்காணிப்புப் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT