இந்தியா

பாம்பு கடித்த தாயிடம் பால் குடித்த குழந்தை மரணம்: டாக்டர் விளக்கம்

செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், கொஜ்ஜபல்லி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகலா. இவர் நேற்று தனது 3 வயது மகன் வம்சியுடன் விவசாய பணிக்கு சென்றார்.

பின்னர் மாலை வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வழியில் பாம்பு சந்திரகலாவை கடித்தது. இதில் அவர் மயங்கி விழுந்தார். இதை அறியாத குழந்தை வம்சி பசியால் அழுதபடி தாய்பால் அருந்தியது.

சிறிது நேரத்தில் குழந்தை யும் மயங்கியது. அப்போது அவ்வழியாக வந்தவர்கள் மயக்கமடைந்த இருவரையும் கண்டு அதிர்ச்சியடைந்து அருகில் உள்ள மருத்துவமனை யில் அனுமதித்தனர். ஆனால் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் கள் தெரிவித்தனர். தாய் சந்திரகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையின் ஓய்வு பெற்ற மருத்துவர் சுப்புலட்சுமி கூறும்போது, “பாம்பு கடித்தால் ரத்தத்தில் தான் விஷம் ஏறும். தாய்பாலில் விஷம் கலக்காது. அப்படியே தாய்ப்பாலில் விஷம் கலந்திருந்தாலும், அதை அருந்தும் குழந்தை உயிரிழக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் தாய்பால் உணவுக்குழாய் வழியாக சென்று உடனடியாக செரிமானம் ஆகிவிடும்.

பாம்பு கடித்த தாயே உயிருடன் இருக்கும் போது, தாய்ப்பால் அருந்திய குழந்தை எப்படி உயிரிழக்கும். தாயை கடித்த பாம்பு, குழந்தையையும் கடித்து இருக்கும். அதனால்தான் குழந்தை உயிரிழந்திருக்கும். குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தால் உண்மை தெரிந்துவிடும்” என்றார்.

SCROLL FOR NEXT