ஹாங்ஸூவில் நடைபெறும் ஜி20 நாடுகள் மாநாட்டின் 2-ம் நாளில் ஊழல், கருப்புப் பணம், வரி ஏய்ப்பு ஆகியவற்றைக் களைந்தால்தான் சிறப்பான நிதி நிர்வாகத்தைக் கொடுக்க முடியும் என்று கூறினார் பிரதமர் மோடி.
ரகசிய வங்கிக்கணக்குகள் வலைப்பின்னல்களை ஒழிக்க வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, பொருளாதார குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு புகலிடங்களை அழித்தொழிக்க முன் வர வேண்டும் என்றார்.
“பாதுகாப்பு புகலிடங்களை ஒழிக்க வேண்டும், அயல்நாடுகளில் பணத்தைப் பதுக்குபவர்களை தடம் காண வேண்டும், சிக்கல் நிறைந்த சர்வதேச கட்டுப்பாடுகளை உடைக்க வேண்டும், அளவுக்கதிகமான வங்கிக்கணக்கு ரகசியம் ஒழிக்கப்பட வேண்டும், இதன் மூலமே ஊழலையும் பொருளாதாரக் குற்றங்களையும் ஒழிக்க முடியும்.
உலகம் முழுதும் ஸ்திரமான பொருளாதார சூழ்நிலையே வளர்ச்சிக்கும் அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த வளர்ச்சிக்கும் முக்கியமானது. உலக நிதி ஆதார பாதுகாப்பு வலையை வலுப்படுத்த வேண்டும்.
ஐ.எம்.எஃப், மண்டல நிதி ஏற்பாடுகள், இருதரப்பு தகவல் பரிமாற்ற ஏற்பாடுகள் குறித்து நாம் தொடர்ந்து உரையாற்ற வேண்டியுள்ளது.
சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்), ஒதுக்கீடு முறையிலான நிறுவனமாக இருக்க வேண்டுமே தவிர, வெளியிலிருந்து வரும் ஆதாரங்களைக் கொண்டு செயல்படுதல் கூடாது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு எரிசக்தி ஆற்றல் மிக முக்கியமானது. அணுசக்தி, இயற்கை எரிவாயு உள்ளிட்ட அனைத்து வகை எரிசக்தி ஆற்றல்களின் ஒரு சமச்சீரான கலவை என்பதே எங்களது மையக் கொள்கை”
இவ்வாறு பிரதமர் பேசியதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தொடர் ட்வீட்கள் மூலம் தெரிவித்தார்.