தெஹல்கா இதழின் நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பாலை 6 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவா நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளித்தது.
சக பெண் நிருபரை பாலியல்ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின்பேரில் கோவா மாநில போலீசார் தேஜ்பால் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்ற னர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பனாஜி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு சனிக்கிழமை நிராகரிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அன்றிரவு அவர் கைது செய்யப் பட்டார். வழக்கமான நடைமுறைகளின்படி கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப் பட்டது. அப்போது செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்து கேள்வி எழுப்பினர். இறுகிய முகத்துடன் காணப்பட்ட அவர் செய்தியாளர்களுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
கொலைக் கைதிகளுடன்…
மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் குற்றப் பிரிவு போலீஸ் தலைமை அலுவலக லாக்-அப்பில் அவர் அடைக்கப்பட்டார். கொலைக்குற்றம் சாட்டப் பட்ட 2 பேர், சமூகவிரோத செயலில் ஈடுபட்ட ஒருவர் ஆகியோரோடு அவர் அன்றிரவைக் கழித்தார். ஞாயிற்றுக்கிழமை காலையில் பனாஜி மாஜிஸ்தி ரேட் சர்மா ஜோஷி முன்னிலையில் தேஜ்பால் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 14 நாள்கள் போலீஸ் காவ லில் விசாரிக்க அனுமதிக்குமாறு போலீசார் கோரினர். தேஜ்பால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், போலீஸ் காவலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இறுதியில் தேஜ்பாலை 6 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார். இதை தொடர்ந்து போலீசார் அவரை குற்றப் பிரிவு தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தங்களின் விசாரணையை தொடங்கியுள்ளனர்.