உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீது பாலியல் புகார் தெரிவித்த பயிற்சி பெண் வழக்கறிஞரின் வாக்குமூலத்தை அவரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் வெளியிட்டேன் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் கூறியுள்ளார்.
முன்னதாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவிடம் அந்த பெண் அளித்த வாக்குமூலம் ரகசிய ஆவணமாகும். அதை இந்திரா ஜெய்சிங் வெளியிட்டது எப்படி சரியாகும் என்று ஏ.கே.கங்குலி கேள்வியெழுப்பியிருந்தார்.
இது தொடர்பாக பதில் அளித்த இந்திரா ஜெய்சிங், “3 நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழுவிடம் அந்த பெண் அளித்த வாக்குமூலத்தை, அவரின் ஒப்புதலுடன்தான் ஊடகங்கள் மூலம் வெளியிட்டேன். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், ஏ.கே.கங்குலிக்கு ஆதரவாக சில அதிகாரம் மிக்க சக்திகள் செயல்பட்டன. தன்னுடைய தரப்பு வாதம் பலவீனமடைந்து வருவதை அறிந்த பின்பே, தனது வாக்குமூலத்தை வெளியிடுமாறு அந்த பெண் கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில்தான் அதை வெளியிட்டேன். இனி, இது தொடர்பாக முடிவு செய்ய வேண்டியது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிதான்” என்றார்.
நீதிபதி பதவியிலிருந்தபோது சில வழக்குகளில் அதிகாரம் மிக்கவர்களுக்கு எதிராக தீர்ப்பு அளித்ததால், அவர்கள் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுகின்றனர் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவத்துக்கு, முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி கடிதம் எழுதியுள்ளார்.
இந்தக் கடிதம் குறித்து கேட்ட போது, “அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை முழுமையாக படிக்காமல் என்னால் கருத்துக் கூற முடியாது. அதோடு, அந்த கடிதத்தை தலைமை நீதிபதிக்குத்தான் அவர் கடிதம் எழுதியுள்ளார். எனவே, இது தொடர்பாக தலைமை நீதிபதிதான் பதில் அளிக்க வேண்டும்” என்றார் இந்திரா ஜெய்சிங்.
- பி.டி.ஐ.