ராமர் கோயில் விவகாரத்தில் சமரசத் தீர்வு ஏற்படவில்லை என்றால் நீதிமன்றம்தான் சரியான தீர்ப்பை வழங்க வேண்டும் என, பாஜக மூத்த தலைவரும் எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, சுப்பிரமணியன் சுவாமி நேற்று சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமர் கோயில் விவகாரத்தில் முஸ்லிம்கள் சமரசத் தீர்வுக்கு வராவிட்டால், நீதிமன்றம் இருக்கிறது. அங்கு தீர்வு கிடைக்கும். இந்த வழக்கில் ஏற்கெனவே நாங்கள் அலகாபாத் நீதிமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளோம். அயோத்தியில் பாபர் மசூதியின் மத்திய மண்டபம் உள்ள இடத்தில் ராமர் பிறந்தார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்து முஸ்லிம் இடையே ஒற்றுமை என்ற பேச்சு வரும்போது, மசூதி எல்லா இடத்திலும் கட்டப்படலாம். ஆனால், ராமர் பிறந்த இடத்தில் மசூதியை எப்படிக் கட்டலாம்? ஏற்கெனவே கோயில் இருந்த இடத்தில் மசூதியைக் கட்டியுள்ளனர். இதில் யார் பிடிவாதமாக இருக்கிறார்கள் என்பது தெரிய வேண்டும்.இவ் வாறு அவர் கூறினார்