கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை தொடரும் என்றும், பினாமி சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக தெரிவித்தார்.
கோவா மாநிலம் மோபாவில் கிரீன்பீல்டு விமான நிலையம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும் அம்மாநிலத்தில் மின்னணு நகர திட்டத்தையும் தொடங்கி வைத்த அவர் உணர்ச்சி பொங்க பேசியதன் முக்கிய அம்சங்கள்:
* 500, 1,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறும் நடவடிக்கையால் சாதாரண பொதுமக்கள் சிரமப்படுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் எனக்கு மனவலியைத் தருகிறது. நேர்மையானவர்கள் பாதிக்கப்படுவதை அரசு விரும்பவில்லை. அதேநேரம் நேர்மையற்றவர்களை விட்டு வைக்கவும் விரும்பவில்லை.
* பொதுமக்கள் அடுத்த 50 நாட்களுக்கு (டிசம்பர் 30) இந்த சிரமங்களை தாங்கிக் கொண்டு ஒத்துழைப்பு தர வேண்டும். அவ்வாறு செய்தால் நீங்கள் விரும்பும் ஊழலற்ற இந்தியாவை நான் உருவாக்குவேன்.
* கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான இந்த நடவடிக்கை இத்துடன் முடிந்துவிடவில்லை. ஊழலற்ற இந்தியாவை உருவாக்க மேலும் சில திட்டங்கள் என் மனதில் உள்ளன. பினாமிகளின் பெயரில் உள்ள சொத்துகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தை ஒழிக்க இது மிகவும் முக்கியமான நடவடிக்கையாகும்.
* இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருந்தால் அதைக் கண்டுபிடித்து மீட்க வேண்டியது நமது கடமை.
* 2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழலில் தொடர்புடையவர்கள் தற்போது ரூ.4 ஆயிரத்தை மாற்றுவதற்காக வங்கிகளில் காத்துகிடக்கின்றனர்.
* தாமாக முன்வந்து கறுப்புப் பணம் பற்றிய தகவலை தெரிவிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ரூ.67 ஆயிரம் கோடி கிடைத்தது. கடந்த 2 ஆண்டுகளில் வருமான வரி சோதனை, ஆய்வுகள் மற்றும் தாமாக முன்வந்து கறுப்புப் பணம் பற்றிய தகவலை தெரிவிக்கும் நடவடிக்கைகள் மூலம் ரூ.1.25 லட்சம் கோடி அரசுக்கு கிடைத்தது.
* என்னுடைய இந்த நடவடிக்கை தவறு என்று நீங்கள் கருதினால் என்னை தூக்கிலிடுங்கள். நாட்டின் உயர்ந்த இருக்கையில் (பிரதமர்) அமர்வதற்காக நான் பிறக்கவில்லை. நாட்டு நலனுக்காக எனது கிராமத்தையும் குடும்பத்தையும் விட்டுவிட்டு வந்துள்ளேன்.
* சில சக்திகள் எனக்கு எதிராக இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் என்னை கொல்லவும் முயற்சிக்கலாம். ஏனெனில், கடந்த 70 ஆண்டுகளாக கொள்ளையடித்தவர்களுக்கு என்னால் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
* 500, 1,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தது முதல் கோடிக்கணக்கான மக்கள் நிம்மதியாக தூங்குகின்றனர். ஆனால் சில லட்சம் பேர் (கறுப்புப் பணம் வைத்திருந்தவர்கள்) தூக்கத்தை இழந்து தூக்க மாத்திரையைத் தேடி அலைகின்றனர்.
* இந்த நடவடிக்கையை எதிர்க் கட்சியினர் குறை கூறுகின்றனர். என்னுடைய முடியைப் பிடித்து இழுத்தால் நான் பின்வாங்கி விடுவேன் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் என்னை உயிருடன் எரித்தாலும் பயப்படமாட்டேன்.