பெங்களூருவில் உள்ள கார்ப்பரேஷன் வங்கி அதிகாரியான ஜோதி உதய் கடந்த 2013-ல் தனது வீடு அருகே உள்ள ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றார். அப்போது முகத்தை மூடியபடி அந்த ஏடிஎம் மையத்துக்குள் சென்ற மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி, ஜோதி உதயின் கணக்கில் இருந்து ரூ.2,500 பணத்தைக் கொள்ளையடித்தார். அத்துடன் அவரையும் சரமாரியாக கத்தியால் தாக்கினார். ஏடிஎம்மில் இருந்த கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏடிஎம் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்ற வாளியை அடையாளம் கண்ட கர்நாடக போலீஸார், அவரை கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் தீவிர மாக தேடி வந்தனர். இந்நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பின், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளியில் குற்றவாளியை அம்மாநில போலீஸார் கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளனர். அவரது பெயர் மதுக்கர் ரெட்டி என்பதும் மதனப்பள்ளி தான் அவரது சொந்த ஊர் என்பதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து சித்தூர் மாவட்ட எஸ்பி ஜி.னிவாஸ் கூறும்போது, ‘‘ரெட்டி மதனப்பள்ளியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ஆனால் விசாரணையில் அதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவரது வீட்டை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். இந்த முறை வீட்டுக்கு வந்தபோது அவரைச் சுற்றிவளைத்து கைது செய்தோம்’’ என்றார்.
பெங்களூரு போலீஸ் ஆணை யர் பிரவீணும் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். அவர், ‘‘மதுக் கர் ரெட்டி என்பவரை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்து வதற்காக தனிக்குழுவை அனுப்பி வைத்துள்ளோம்’’ என்றார்.
பெங்களூருவில் வங்கி அதி காரியிடம் இருந்து பணத்தைக் கொள்ளையடித்ததும், மதுக்கர் ரெட்டி கேரளாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். அங்கேயே ஓராண்டு தங்கியுள்ளார். பின்னர் ஹைதரா பாத்துக்கு சென்று தனது பெற் றோருடன் வசிக்கத் தொடங்கினார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.