மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் மத்திய இந்தி நிறுவனம் செயல்படுகிறது. இந்தி மொழியின் வளர்ச்சிக்காக பாடுபடுவோருக்கு, சுப்பிரமணிய பாரதியார் உட்பட 12 மொழி அறிஞர்களின் பெயரில் இந்த அமைப்பு ஆண்டுதோறும் விருது வழங்குகிறது. தற்போது 2015-ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழரும் இந்தி மொழி அறிஞருமான எம்.கோவிந்தராஜன் உள்ளிட்ட 5 பேருக்கு கங்கா சரண் சிம்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் பொற்கிழி, சால்வை மற்றும் பாராட்டுப் பத்திரம் கொண்ட இந்த விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் வழங்கவுள்ளார்.
உ.பி.யின் அலகாபாத்தில், மொழிகளைப் பாலமாக வைத்து நாட்டு மக்களை இணைக்கும் பாஷா சங்கம் செயல்படுகிறது. இதன் பொதுச் செயலாளராக கோவிந்தராஜன் பணியாற்றி வருகிறார். துளசி ராமாயணம் உட்பட பல்வேறு நூல்களை இவர் இந்தியில் மொழிபெயர்த்துள்ளார். இதுபோன்ற இந்தி மொழி சேவைக்கான விருதுகளை கோவிந்தராஜன் இதற்கு முன் பலமுறை பெற்றுள்ளார்.
‘தி இந்து’விடம் கோவிந்தராஜன் கூறும்போது, “வழக்கம்போல் இந்த முறையும் விருதுத் தொகையை நன்கொடையாக அளிக்க வுள்ளேன். சென்னை தி.நகரின் ராமகிருஷ்ண ஆசிரமம், நான் கல்வி பயின்ற தஞ்சாவூர் இந்து மாதிரி துவக்கப் பள்ளி, தஞ்சாவூரில் செயல்பட்டுவரும் பன்மொழி வளர்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு பரிசுத் தொகையை பகிர்ந்து அளிக்கவுள்ளேன்” என்றார்.