குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நாட்டின் பிரதமரானால் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறினார்.
“நரேந்திர மோடி பிரதமரானால் மகிழ்வேஎன். குஜராத்தில் அவர் ஏற்படுத்தியுள்ள வளர்ச்சியை இந்தியா மட்டுமல்ல; உலகமே புகழ்கிறது” என்றார் அத்வானி.
ஆமதாபாதில் இன்று நடைபெற்ற உயர்கல்வி நிறுவன தொடக்க விழாவில் பங்கேற்ற அத்வானி இவ்வாறு பேசினார். பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ளதை, இப்போது முதல்முறையாக அத்வானி அங்கீகரித்துள்ளார்.
அத்வானி - மோடி இடையேயான முட்டல், மோதல்கள் பல்வேறு சூழ்நிலைகளில் வெளிப்படையாகத் தெரியவந்து பல காலம் கடந்த பின்பு இப்போது திடீரென மோடி பிரதமரானால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன் என்று அத்வானி பேசியுள்ளது எல்லா தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மற்றொரு முக்கிய நிகழ்வாக, ஆமதாபாதில் இன்று நடைபெற்ற மாநகராட்சி பூங்கா திறப்பு விழாவில் அத்வானியும், மோடியும் ஒன்றாகப் பங்கேற்றனர்.
2011-ம் ஆண்டுக்குப் பின் குஜராத் மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் ஒன்றாகப் பங்கேற்பது இதுவே முதல்முறை.
முன்னதாக கடந்த செப்டம்பர் 25-ல் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருவரும் ஒரே மேடையில் இருந்தனர். அப்போது அத்வானியின் காலில் விழுந்து மோடி ஆசி பெற்றார். ஆனால் பாராமுகமாக இருந்தார் அத்வானி.