அமர்நாத் புனித யாத்திரை தொடங்கிய இரு தினங்களில் இதுவரை 24,000 பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ள னர். மேலும் 1,414 பக்தர்கள் யாத்திரைக்காக நேற்று ஜம்முவில் இருந்து புறப்பட்டுள்ளனர்.
இமயமலையில் கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகையில் ஆண்டுதோறும் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை காண நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான 48 நாள் புனித யாத்திரை கடந்த 2-ம் தேதி தொடங்கி, வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி நிறைவடைகிறது. இதையொட்டி நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஜம்முவில் குவிந்து வருகின்றனர். யாத்திரை தொடங்கிய இரு தினங்களில் இதுவரை 24,000 பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்துவிட்டு திரும்பியுள்ளனர்.
அடுத்தக்கட்டமாக ஜம்முவில் இருந்து 38 பேருந்துகள் மூலம் 2-வது பக்தர்கள் குழு நேற்று அமர்நாத் அடிவாரம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.
மொத்தம் 1,414 பக்தர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக காஷ்மீர் பள்ளத் தாக்கில் இருந்து அமர்நாத் குகை கோயில் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராணுவம், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் என பல கட்ட பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.