காங்கிரஸுக்கு செல்வாக்கு உள்ள கான்பூரிலிருந்து ஆரம்பம்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை உத்தரப் பிரதேசத்தில் அக்டோபர் மாதம் தொடங்குகிறார் நரேந்திர மோடி.
காங்கிரஸுக்கு அதிக செல்வாக்கு உள்ள பகுதிகளான கான்பூர், ஜான்ஸி, பரைச் ஆகிய நகரங்களில் இருந்து அவரது பிரசாரம் தொடங்குகிறது.
கட்சியின் பிரதமர் வேட்பாளரான பிறகு உத்தரப் பிரதேசத்துக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது.
கான்பூரில் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் உள்ளிட்டோர் பேசுகிறார்கள். அதையடுத்து அக்டோபர் 25ம் தேதி ஜான்ஸி நகரிலும் நவம்பர் 8ஆம் தேதி பரைச் நகரிலும் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறும் என கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் விஜய் பகதூர் பாதக் தெரிவித்தார்.
கான்பூர், ஜான்ஸி, பரைச் ஆகிய மூன்று இடங்களுமே காங்கிரஸுக்கு செல்வாக்குள்ள இடங்கள். சொல்லப் போனால் இவற்றில் இரு இடங்களிலிருந்து 2 பேர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.
கான்பூர் தொகுதி எம்.பி. ஸ்ரீஜெய்பிரகாஷ் ஜெய்ஸ்வால் நிலக்கரித்துறை அமைச்சராகவும் ஜான்ஸி தொகுதியைச் சேர்ந்த எம்.பி. பிரதீப் ஜெயின் ஆதித்யா ஊரக மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராகவும் இடம்பெற்றுள்ளனர்.
பரைச் மக்களவைத் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கமல் கிஷோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது நரேந்திர மோடி பிரசாரத்தில் பங்கேற்கவில்லை.
உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 545 உறுப்பினர் கொண்ட மக்களவையில் உத்தரப் பிரதேசத்தின் பங்களிப்பு 15 சதவீதம் ஆகும். மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும் எனபதை தீர்மானிக்கக் கூடிய மாநிலமாக உத்தரப் பிரதேசம் விளங்கி வருகிறது.
2009ம் ஆண்டில் நடந்த தேர்தலில் சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்குப் பிறகு கடைசி இடத்தை பிடித்தது பாஜக..
மத்திய அரசுக்கு எதிரான பல்வேறு ஊழல் புகார்கள், முசாபர்நகர கலவரம், பொருளாதார தேக்கநிலை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை முன்வைத்து பாஜக பிரசாரத்தில் ஈடுபடும் என தெரிகிறது.