ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிராக காங்கிரஸ் கடுமையான நடவடிக்கையை எடுத்து வருவதாகவும், ஊழலை ஒழிக்க காங்கிரஸ் உறுதிபூண்டுள்ளதாகவும் சோனியா காந்தி கூறினார்.
மேலும், பாஜக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தின் ஜபுவா பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் மேலும் பேசும்போது, "
ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், பாஜகவோ ஊழலில் ஈடுபட்ட தனது கட்சியைச் சேர்ந்தவர்களை பாதுகாத்து வருகிறது.
பாஜக ஆட்சியில் உள்ள மத்திய பிரதேச மாநிலத்துக்கு கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், அதன் பின்பும் மத்திய பிரதேச மாநிலம் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. சத்துணவுக் குறைபாடு, விவசாயிகள் தற்கொலை உள்ளிட்டவை அதிகரித்துள்ளன.
வளர்ச்சிப் பணிகளுக்காக மத்திய அரசு அனுப்பி வைத்த நிதியை மாநில அரசு சரியாக பயன்படுத்தவில்லை. மாநில மக்களின் நலனுக்காகத்தான் மத்திய அரசு நிதி அளிக்கிறது. ஒரு சிலரின் வளத்தை அதிகரித்துக் கொள்வதற்காக அல்ல" என்றார் சோனியா.