வங்கிகளிடம் வாங்கிய சுமார் ரூ.9,000 கோடி கடன் நிலுவை விவகாரம் பெரிதாகக் கிளம்ப, விஜய் மல்லையா மார்ச் 2-ம் தேதியே வெளிநாடு சென்றுவிட்டார். அவர் வெளிநாடு சென்றவிட்ட தகவலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
மார்ச் 2-ம் தேதி கடன் மீட்பு தீர்ப்பாயத்திடம் மத்திய வங்கிகள் கூட்டமைப்பு மல்லையா விவகாரத்தை கொண்டு சென்ற அதே நாளிலேயே தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டார் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
விஜய் மல்லையாவை நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கக் கோரி மத்திய வங்கிகளின் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழிகாட்டுதல் கோரி மனு செய்திருந்தது.
அந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் ரொஹிண்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய அமரிவின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் மல்லையா எங்கு இருக்கிறார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு வங்கிகள் சார்பாக ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி, உச்ச நீதிமன்றத்திடம் விஜய் மல்லையா மார்ச் 2-ம் தேதியன்றே நாட்டை விட்டு கிளம்பி விட்டார் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ‘நம்மிடம் மிகக்குறைவான தெரிவுகளே உள்ளன’ என்று நீதிபதிகள் கூற ரோஹட்கி, ‘சிபிஐ இந்த தகவலை அளித்தது’ என்றார்.
பிறகு விஜய் மல்லையாவை தனது பாஸ்போர்ட்டுடன் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடலாம் என்றார்.
“நாங்கள் அவரிடமிருந்து கடன் தொகையை திரும்ப பெற்றே ஆகவேண்டும். சமூக வலைத்தளங்களின் தரவுகளின் படி அவரது பெரும்பாலான சொத்துகள் அயல்நாட்டில் உள்ளன. இந்தியாவில் குறைந்த அளவே உள்ளன. அதாவது ஐந்தில் ஒரு பங்கு சொத்து இந்தியாவில் இருக்க வாய்ப்புள்ளது” என்றார்.
இதற்கு நீதிபதி குரியன், “பிறகு எந்த அடிப்படையில் அவருக்கு இப்படி கடன்கள் அளிக்கப்பட்டது? இந்தக் கடன்களை திருப்பி எடுக்கும் சொத்துகள் எதுவும் இல்லையா?” என்றார்.
இதற்கு பதில் அளித்த ரோஹட்கி, கடன்கள் வழங்கப்பட்ட போது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அதன் உச்சத்தில் இருந்தது. அதன் பெயரில் ரூ.1000 கோடி அளவில் சொத்து இருந்தது, பிறகு அது சரிவடைந்தது, கொடுக்கப்பட்ட கடன்களுக்கு எதிராக சில சொத்துக்கள் கைவசம் உள்ளன என்றார்.
இதனையடுத்து விஜய் மல்லையாவுக்கு அவரது நிறுவனமான யுனைடெட் பிரவரீஸ், அவரது வழக்கறிஞர், பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் விஜய் மல்லையாவின் ராஜ்யசபா மின்னஞ்சல் முகவரி மூலம் நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
விஜய் மல்லையா பிரிட்டனில்தான் இருக்கிறார் என்பது எப்படி உறுதியாகத் தெரியும் என்று நீதிபதி குரியன் கேள்வி எழுப்ப, அதற்கு ரோஹட்கி, “அவருக்கு அங்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன, எனவே அவர் அங்கு இருக்கவே வாய்ப்பிருப்பதாக கருதுகிறோம்” என்றார்.