இந்தியா

கொள்ளையர்களின் கட்சி பாஜக: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

பாரதிய ஜனதா கொள்ளையர்களின் கட்சி, சத்தீஸ்கர் மாநிலத்தின் இயற்கை வளங்களை அந்த கட்சியின் தலைவர்கள் கொள்ளை யடித்து வருகின்றனர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

சத்தீஸ்கர் சட்டமன்ற 2-ம் கட்ட தேர்தலையொட்டி கார்சியா நகரில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் அவர் பேசியது:

நக்ஸல்கள் தாக்குதலில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் நந்தகுமார் பட்டேல் உயிரிழந்தார். அவருக்குப் பதிலாக 500 நந்தகுமார்கள் உருவாக வேண்டும். அந்த 500 நந்த குமார்களை டெல்லியில் இருந்து அழைத்து வர நான் விரும்பவில்லை. இங்கேயே, இந்தக் கூட்டத்திலேயே அவர்கள் உருவாக வேண்டும்.

பாரதிய ஜனதா இப்போது கொள்ளையர்களின் கட்சியாகி விட்டது. அவர்கள் மாநிலத்தின் இயங்கை வளங்களை கொள்ளை யடித்து வருகின்றனர். புதிதாக உருவாகும் நந்தகுமார்கள் அவ ர்களை விரட்டியடிக்க வேண்டும்.

சத்தீஸ்கர் இயற்கை வளம் நிறைந்த மாநிலம். இந்த வளங்கள் மக்களுக்கு சொந்தமானவை. பெண்கள், குழந்தைகள், மக்களுக்காக இயற்கை வளங்கள் பயன்படுத்தப்பட்டால் டெல்லி, ஹரியாணா போன்று சத்தீஸ்கரும் முன்னேறிவிடும். நந்த குமார் உயிரோடு இருந்திருந்தால் அவர் நிச்சயம் முதல்வராகி இருந்திருப்பார். அடுத்த 15 ஆண்டுகளுக்கு அவர் தான் முதல்வராக நீடித்திருப்பார். ஏனென்றால் அவர்கள் சமானிய மக்களின் துன்பம் துயரங்களை அறிந்தவர்.

பஸ்தார் பகுதியின் ஜெய்ராம் காட் என்ற இடத்தில் கடந்த மே 25-ல் நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் நந்த குமார் உயிரிழந்தார். ஆனால் இங்குள்ள பழங்குடியின, தலித் மக்களுக்கு ஒவ்வொரு நாளுமே மே 25 ஆக உள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்கள், வறுமையில் வாடும் மக்கள் என அனைத்து தரப்பினரும் பாஜக ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் ஒவ்வொரு நாளும் மே 25 ஆகவே உள்ளது என்றார் ராகுல் காந்தி.

நந்தகுமாரின் சொந்த தொகுதி யான கார்சியாவில் அவரது மகன் உமேஷ் பட்டேலை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. அவருக்கு ஆதரவாக ராகுல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

SCROLL FOR NEXT