இந்தியா

வெறுப்பைத் தூண்டும் பேச்சு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

அரசியல்வாதிகளும் சமூக, மத அமைப்புகளின் தலைவர்களும் மதம், சமூகம், மொழி, இனம் போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு பிரிவினர் இடையில் மோதலை ஊக்குவிக்கும் நோக்கிலும் வெறுப்பை தூண்டும் வகையிலும் பேசுவது பற்றிய பிரச்சினையை ஆராயும்படி சட்ட ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

வெறுப்பைத் தூண்டும் வகையில் வெளியாகும் பேச்சுகளுக்கு கடிவாளம் போடுவதற்காக பொது விதிமுறைகளை வகுக்க பரிசீலிக்கும்படியும் அது கேட்டுக்கொண்டுள்ளது.

வெறுப்பு, பகைமையைத் தூண்டும் பேச்சுகளைத் தடுக்க நீதிமன்றமே பொது விதிமுறைகளை வகுக்கலாம் என விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த நீதிபதி பி.எஸ்.சௌகான் தலைமையிலான அமர்வு, இது பற்றி சட்ட ஆணையம் ஆராய்ந்து தமது பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கலாம் என்றும் அறிவுறுத்தியது.

நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் கட்டமைப்பை சீர்குலைப்பதாகவும் அரசமைப்புச் சட்ட விதிகளை மீறுவதாகவும் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகள் உள்ளன. எனவே அது போன்ற பேச்சுக்களை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் பொது விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கோரி பிரவாசி பலாய் சங்கதான் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது மேற்சொன்ன உத்தரவை பிறப்பித்தது உச்சநீதிமன்ற அமர்வு.

பகைமை உணர்வைத் தூண்டும் பேச்சுகள் அதிகமாக ஆந்திரம், மகாராஷ்டிரத்தில் வெளியாவதால் அந்த இரு மாநிலங்களும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர் தரப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரே வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசினாலும் அவர் மீது மாநிலத்தில் வழக்கு தொடரப்படவில்லை என மனுவில் சுட்டிக் காட்டியுள்ளது பிரவாசி பலாய் சங்கதான்.

ஆந்திரத்தில் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹதூல் முஸ்லிமீன் தலைவர் அக்பருதீன் ஒவைசி, வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டார். ஆனால் ஜாமீனில் வெளிவந்த பிறகு மீண்டும் அதே போல் வெறுப்பு, பகைமையை தூண்டக்கூடிய வகையில் மகாராஷ்டிர மாநிலம் நான்டெட்டில் பேசினார் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT